மத்தேயு 7:1-20
மத்தேயு 7:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“தீர்ப்புச் செய்யாதிருங்கள், நீங்களும் தீர்க்கப்படாதிருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். “நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? உன் கண்ணில் உத்திரம் இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; அப்பொழுது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கக்கூடும். “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்கவேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவை முத்துக்களை மிதித்துவிட்டு, திரும்பி உங்களையும் பீறிப்போடும். “கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிறார்கள்; தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள்; தட்டுகிறவர்களுக்குக் கதவு திறக்கப்படுகிறது. “அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு, உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்? அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்! ஆகவே, மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் ஆகும். “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள். ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள். ஆனால் இடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள். “பொய் தீர்க்கதரிசிகளைக்குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள். அவர்களது கனியினால் நீங்கள் அவர்கள் யாரென்று அடையாளம் கண்டுகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லையே, அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரமோ, கெட்ட கனியையே கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை. நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பில் வீசப்படும். இவ்வாறு, அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
மத்தேயு 7:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள். ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள். அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
மத்தேயு 7:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)
“மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும். “உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள். “புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும். “தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும். “உங்களில் யாருக்கேனும் குமாரன் உண்டா? உங்கள் குமாரன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. அல்லது, உங்கள் குமாரன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ? “மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும். “பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள். “போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.
மத்தேயு 7:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம். இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.