மத்தேயு 6:6-13

மத்தேயு 6:6-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதியளிப்பார். நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார். “ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே: “ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல், எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’

மத்தேயு 6:6-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

மத்தேயு 6:6-13 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார். “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார். நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்: “‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே, உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம். உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக. மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே எங்கள் குற்றங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணாமல் பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’

மத்தேயு 6:6-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

மத்தேயு 6:6-13

மத்தேயு 6:6-13 TAOVBSIமத்தேயு 6:6-13 TAOVBSIமத்தேயு 6:6-13 TAOVBSIமத்தேயு 6:6-13 TAOVBSI