மத்தேயு 6:1-4
மத்தேயு 6:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது. “ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி, வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
மத்தேயு 6:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
மத்தேயு 6:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
“நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. “நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
மத்தேயு 6:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.