மத்தேயு 5:33-37

மத்தேயு 5:33-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“மேலும், ‘நீங்கள் ஆணையிட்டதை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட ஆணைகளை நிறைவேற்றுங்கள் என்று, வெகுகாலத்திற்கு முன்னே முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.’ ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒருபோதும் ஆணையிட வேண்டாம்: பரலோகத்தின்மேல் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை; பூமியின்மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம். உங்கள் தலையில் கை வைத்தும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் உங்களால் ஒரு தலைமுடியையாகிலும் வெண்மையாக்கவோ, கருமையாக்கவோ முடியாதே. ஆகவே உங்களிடமிருந்து வரும் பதில், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் இருக்கட்டும்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.

மத்தேயு 5:33-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

மத்தேயு 5:33-37 பரிசுத்த பைபிள் (TAERV)

“‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’ என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம். பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா ராஜாவின் நகரம். உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது. ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே கூறுங்கள். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதற்கு மேலாக ஏதும் நீங்கள் கூறினால் அது பொல்லாங்கனாகிய பிசாசின் வார்த்தைகளாயிருக்கும்.”

மத்தேயு 5:33-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.