மத்தேயு 24:30-35

மத்தேயு 24:30-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அவ்வேளையில், மானிடமகனாகிய நான் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் புலம்புவார்கள். மானிடமகனாகிய நான் அதிகாரத்துடனும், மிக்க மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள்மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள். நான் என் தூதர்களை சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்து சேர்த்துக்கொள்வேன். “இப்பொழுது அத்திமரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.

மத்தேயு 24:30-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள். வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

மத்தேயு 24:30-35 பரிசுத்த பைபிள் (TAERV)

“அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள். “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள். “அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.

மத்தேயு 24:30-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.