மத்தேயு 24:1-28

மத்தேயு 24:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள். ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்குள்ள ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில் ‘நானே கிறிஸ்து,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வருவார்கள். அவர்கள் பலரை ஏமாற்றுவார்கள். நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் பயப்படாதபடி கவனமாயிருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே வேண்டும். ஆனால் முடிவு வருவதற்கோ, இன்னும் காலம் உண்டு. நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கு விரோதமாய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே. “அப்பொழுது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் நிமித்தம் நீங்கள் எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்படுவீர்கள். அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். ஒருவரையொருவர் அவர்கள் காட்டிக்கொடுக்கிறவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள். அநேக பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள். அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். ஆனால் முடிவுவரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். இறை அரசின் இந்த நற்செய்தி முழு உலகமும் அறியும்படி எல்லா ஜனங்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அதற்குப் பின்பே முடிவுவரும். “எனவே இறைவாக்கினன் தானியேல் மூலம் சொல்லப்பட்ட, ‘பாழாக்குகிற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்கிறதை நீங்கள் காணும்பொழுது, வாசிக்கிற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும், வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகாதிருக்கட்டும். வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும். அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நீங்கள் ஓடிப்போவது குளிர்க்காலத்தில் அல்லது ஓய்வுநாளில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். ஏனெனில், உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெரும் துன்பம் அக்காலத்தில் ஏற்படும். அதற்குப் பின்பு ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது. “அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், அந்த நாட்கள் குறைக்கப்படும். அக்காலத்தில் யாராவது உங்களிடம் வந்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது, ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும் பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். முடியுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன். “ஆகவே யாராவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைவனத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள்ளறையில் இருக்கிறார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள். ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மானிடமகனாகிய என்னுடைய வருகையும் இருக்கும். எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்.

மத்தேயு 24:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும். வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும். அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள். ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.

மத்தேயு 24:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். இயேசு சீஷர்களை நோக்கி, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா? உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நாசமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும்” என்று கூறினார். பின்னர், இயேசு ஒலிவ மலையின்மீது ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். இயேசுவுடன் தனிமையில் இருக்க வந்த சீஷர்கள், அவரிடம், “இவை எப்பொழுது நடக்கும் என்று எங்களுக்குக் கூறுங்கள். நீர் மீண்டும் தோன்றப் போகிறதையும் உலகம் அழியும் என்பதையும் எங்களுக்கு உணர்த்த எம்மாதிரியான செயல் நடக்கும்?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு, “எச்சரிக்கையுடன் இருங்கள்! யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள். போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும். இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார். “பின்னர் மக்கள் உங்களை மோசமாக நடத்துவார்கள். துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் ஆட்சியாளர்களிடம் உங்களை ஒப்படைப்பார்கள். அனைவரும் உங்களை வெறுப்பர். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இவை அனைத்தும் உங்களுக்கு நிகழும். அக்காலக் கட்டத்தில், பலர் தாம் கொண்ட விசுவாசத்தை இழப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பி ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். உலகில் மேலும், மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். ஆனால் தொடர்ந்து இறுதிவரை உறுதியாய் இருப்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும். “அழிவை ஏற்படுத்துகிற கொடிய காரியத்தைப்பற்றி தீர்க்கதரிசி தானியேல் கூறியுள்ளார். ‘இக்கொடியதை தேவாலயத்தில் நின்றிருக்க நீங்கள் காண்பீர்கள்.’ (இதைப் படிக்கிற நீங்கள் அது என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும்.) அந்நேரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும். கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஓடிவிட வேண்டும். வீட்டின் கூரையின் மீதிருப்பவன், வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுப்பதற்காக கீழே இறங்கக் கூடாது. வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது. “கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள். ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது. “அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார். “அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன். “‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்,’ என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும்.

மத்தேயு 24:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப் படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்