மத்தேயு 23:1-10
மத்தேயு 23:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடரையும் பார்த்துச் சொன்னதாவது: “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயரும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்யுங்கள். ஆனால் அவர்கள் செய்வதை நீங்கள் செய்யவேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைத் தாங்களே செய்வதில்லை. அவர்கள் பாரமான சுமைகளைக் கட்டி மக்களின் தோள்கள்மேல் வைக்கிறார்கள். ஆனால் அவர்களோ, அவற்றை நகர்த்துவதற்குத் தங்களது ஒரு விரலைக்கூட நீட்டவும் மனதற்றவர்களாக இருக்கிறார்கள். “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயர்களும் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டுமென்றே செய்யப்படுகின்றன: வேதவசனம் பொறித்த இடைப்பட்டிகளை அகலமாக்கி, தங்கள் உடைகளின் தொங்கல்களை நீளமாக்குகிறார்கள்; அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும், மக்கள் தங்களை ‘போதகர்’ என்று அழைப்பதையும் விரும்புகிறார்கள். “நீங்களோ ‘போதகர்’ என்று அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு போதகர் மட்டுமே இருக்கிறார். நீங்கள் எல்லோரும் சகோதரராய் இருக்கிறீர்கள். பூமியிலுள்ள யாரையும் ‘பிதா’ என்று அழைக்காதிருங்கள். ஏனெனில், உங்களுக்கு ஒரு பிதாவே இருக்கிறார், அவர் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் ‘குருக்கள்’ என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு குருவே இருக்கிறார், அவர் கிறிஸ்துவே.
மத்தேயு 23:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து: வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார். நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.
மத்தேயு 23:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். “வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை. “அவர்கள் நற்செயல்களைச் செய்வதற்கான ஒரே காரணம் மற்றவர்கள் அவற்றைக் காண வேண்டும் என்பதே. அவர்கள் வேத வாக்கியங்களில் வாசகங்களைக் கொண்ட தோல் பைகளை அணிந்து செல்கிறார்கள். அவற்றை மேலும், மேலும் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலும் மக்கள் காணும்படியாகப் பிரார்த்தனைக்கான சிறப்பு உடையை மிக நீண்டதாக அணிகிறார்கள். அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு மரியாதை செய்யவும் மக்கள் தங்களை ‘போதகரே’ என அழைக்கவும் விரும்புகிறார்கள். “ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து.
மத்தேயு 23:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.