மத்தேயு 20:17-24

மத்தேயு 20:17-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு எருசலேமை நோக்கிப் போகையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், அவர்களுக்குச் சொன்னதாவது: “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள். என்னை ஏளனம் செய்து சவுக்கால் அடித்துச் சிலுவையில் அறையும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும் நான் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பேன்!” அப்பொழுது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய் தனது மகன்களைக் கூட்டிக்கொண்டு இயேசுவிடம் வந்தாள். அவள் முழங்காற்படியிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள். “நீ விரும்புவது என்ன?” என்று அவர் அவளிடம் கேட்டார். அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்கவேண்டும்” என்றாள். இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கப்போகும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் யாருக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார். இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள்.

மத்தேயு 20:17-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள். அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.

மத்தேயு 20:17-24 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போய்கொண்டிருக்கிறோம். தலைமை ஆசாரியர்களிடமும் வேதபாரகர்களிடமும் மனித குமாரன் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனித குமாரன் இறக்க வேண்டும் என்பார்கள். யூதர்கள் அல்லாத வேற்று மனிதர்களிடம் மனித குமாரனை ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் கேலி செய்து சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்து கொல்வார்கள். ஆனால், மூன்றாவது நாள் மரணத்திலிருந்து மனித குமாரன் உயிர்த்தெழுவார்” என்று கூறினார். பின்னர், செபதேயுவின் குமாரர்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள். இயேசு அவளிடம், “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார். அவள், “எனது ஒரு குமாரன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது வலது பக்கம் இருக்கவும், மற்றொரு குமாரன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது இடது பக்கம் இருக்கவும் வாக்களியுங்கள்” என்று கேட்டாள். அதைக் கேட்ட இயேசு அவளது குமாரர்களிடம், “நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அனுபவிக்கப்போகும் துன்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார். “ஆம், எங்களால் முடியும்” என்று அவர்கள் பதில் சொன்னார்கள். இயேசு அவர்களிடம், “மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை” என்றார். இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள்.

மத்தேயு 20:17-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு எருசலேமுக்குப் போகும் போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்