மத்தேயு 20:1-6 - Compare All Versions

மத்தேயு 20:1-6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“பரலோக அரசு நிலத்தின் சொந்தக்காரன் ஒருவன் தனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்வதற்கென அதிகாலையிலே புறப்பட்டுபோய், கூலியாட்களை கூலிக்கு அமர்த்தியவனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசைக் கொடுப்பதற்கு உடன்பட்டு, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான். “விடிந்த பின்பு கிட்டத்தட்ட காலை ஒன்பது மணியளவில் அவன் வெளியே போனபோது, வேறுசிலர் சந்தைகூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான். அப்படியே அவர்களும் சென்றார்கள். “அவன் மீண்டும் நண்பகல் வேளையிலும், பிற்பகல் மூன்றுமணிக்கும், வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்புபோலவே செய்தான். கிட்டத்தட்ட மாலை ஐந்து மணிக்கு அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதுமாக ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

மத்தேயு 20:1-6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான். காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான். ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

மத்தேயு 20:1-6 TAERV (பரிசுத்த பைபிள்)

“பரலோக இராஜ்யமானது சிறிது நிலம் வைத்திருந்த ஒருவனைப் போன்றது, அவன் தனது நிலத்தில் திராட்சை விளைவித்தான். ஒரு நாள் காலை தன் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடிப் போனான். ஒரு நாள் வேலைக்கு ஒரு வெள்ளிக்காசு கூலி தர அவன் ஒத்துக்கொண்டான். பிறகு வேலை ஆட்களைத் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பினான். “சுமார் ஒன்பது மணிக்கு அம்மனிதன் சந்தைப் பக்கமாகப் போனான். அங்கு சிலர் வேலை ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். எனவே அவன் அவர்களிடம், ‘நீங்கள் சென்று என் தோட்டத்தில் வேலை செய்தால், நீங்கள் செய்யும் வேலைக்குத் தகுந்தாற்போல உங்களுக்கு ஊதியம் தருகிறேன்’ என்றான். எனவே, அவர்களும் அவன் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றார்கள். “மீண்டும் அவன் பன்னிரண்டு மணி அளவிலும் மூன்றுமணி அளவிலும் வெளியில் சென்று, ஒவ்வொரு முறையும் மேலும் சிலரைத் தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தான். மீண்டும் ஐந்து மணி அளவில் சந்தைவெளிக்குச் சென்றான். மேலும் சிலர் அங்கே நின்றிருப்பதைக் கண்டு அவர்களிடம், ‘ஏன் நாள் முழுக்க வேலை எதுவும் செய்யாமல் இங்கே நின்றிருந்தீர்கள்’ என்று கேட்டான்.

மத்தேயு 20:1-6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.