மத்தேயு 19:1-12

மத்தேயு 19:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு இவற்றைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்திலுள்ள யூதேயா பகுதிக்குச் சென்றார். மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணப்படுத்தினார். சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பில் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்பதை நீங்கள் வாசித்ததில்லையா” இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கிறார்கள். ஆகையால் “இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். அதற்கு அவர்கள், “அப்படியானால் ஒருவன் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் இது தொடக்கத்திலிருந்து அப்படியிருக்கவில்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, அதற்குப் பின்பு வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்” என்றார். சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படியானால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தையை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான வரம் பெற்றவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.

மத்தேயு 19:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார். அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை. ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள். அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

மத்தேயு 19:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை அனைத்தையும் கூறிய பின்னர், இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். யோர்தான் நதிக்கு மறுகரையில் உள்ள யூதேயாவிற்கு இயேசு சென்றார். மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார். இயேசுவிடம் வந்த பரிசேயர்கள் சிலர் இயேசுவைத் தவறாக ஏதேனும் சொல்ல வைக்க முயன்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா?” என்று கேட்டனர். அவர்களுக்கு இயேசு, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள். தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’ எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார். அதற்குப் பரிசேயர்கள், “அப்படியெனில் எதற்காக ஒருவன் விவாகரத்து பத்திரம் எழுதிக் கொடுத்துத் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளான்?” என கேட்டார்கள். அதற்கு இயேசு, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை. நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார். இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள். அதற்கு இயேசு, “திருமணம் குறித்த இவ்வுண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தேவன் சிலரை அப்படிப்பட்ட கருத்தை ஒப்புக்கொள்ள ஏதுவாக்கியுள்ளார். சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.

மத்தேயு 19:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார். அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள். அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.