மத்தேயு 18:1-20

மத்தேயு 18:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள். ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார். “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான். “என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ! உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ? நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான். அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல. “உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய். ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ. அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து. “மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும். “மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும். ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.

மத்தேயு 18:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள். இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும். இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார். உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல. உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக. உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

மத்தேயு 18:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “பரலோக இராஜ்யத்தில் யார் மிகப் பெரியவர்?” என்று கேட்டனர். இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மருகில் அழைத்து, தம் சீஷர்கள் முன் நிறுத்தினார். பின் அவர்களிடம் கூறினார், “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது. இந்த சிறு பிள்ளையைப்போல பணிவுள்ளவனாகிறவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவன். “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன், என்னையும் ஏற்றுக்கொள்கிறான். “என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும். அவ்வாறு செய்கிறவன், ஒரு ஆட்டுக்கல்லைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் மூழ்குவதே நல்லது. பாவம் செய்ய மக்கள் சோதிக்கப்படுவதால், அவர்களுக்காக வருந்துகிறேன். அவ்வாறான செயல்கள் நடக்கவேண்டும்தான். ஆனால், அவற்றுக்குக் காரணமானவர்களுக்கு மிகுந்த தீங்கு வரும். “உங்களது கையோ அல்லது காலோ உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறியுங்கள். சரீரத்தின் ஒரு பகுதியை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரு கை கால்களுடன் எரிகின்ற நரகத்தின் தீயில் என்றென்றைக்குமாக எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது. உங்களது கண் உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைப் பிடுங்கி எறியுங்கள். ஒரு கண்ணை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரண்டு கண்களுடன் நரகத்தின் தீயில் எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது. “எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். “நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். “உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்கு ஏதாவது தீமை செய்தால், அவர் செய்த தீமையை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதைத் தனிமையில் அவனிடம் சொல்லுங்கள். அதை அவர் கவனமாகக் கேட்பாரானால், அவர் மீண்டும் உங்கள் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்க நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர் மறுத்தால், மீண்டும் இரண்டு மூன்று பேருடன் சென்று நடந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது, நடந்ததை உறுதிசெய்ய இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். அப்பொழுதும் அவன் கேட்க மறுத்தால், சபையாரிடம் சொல்லுங்கள். சபையார் சொல்வதையும் கேட்காமற் போனால், தேவ நம்பிக்கையற்றவனைப்போல் அவனை நடத்துங்கள். வரி வசூல் செய்பவனைப்போல் நடத்துங்கள். “நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும். மேலும், நான் சொல்லுகிறேன். உங்களில் இருவர் இவ்வுலகில் எதைக் குறித்தேனும் ஒரே மனமுடையவர்களாயிருந்தால் அதற்காக நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் கேட்பது பரலோகத்தில் உள்ள எனது பிதாவால் நிறைவேற்றப்படும். இது உண்மை. ஏனென்றால், இரண்டு மூன்று பேர் என்னில் விசுவாசம் வைத்துக் கூடினால் அவ்விடத்தில் நான் இருப்பேன்.”

மத்தேயு 18:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ! உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார். உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்