மத்தேயு 17:4-9
மத்தேயு 17:4-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் நான் மூன்று கூடாரங்களை அமைப்பேன். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்!” என்றான். பேதுரு இன்னமும் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பிரகாசமுள்ள மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் அன்பு மகன், இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒலித்தது. சீடர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் மிகவும் பயமடைந்து தரையில் முகங்குப்புற விழுந்தார்கள். ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார். அவர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும்வரை நீங்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
மத்தேயு 17:4-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார். அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
மத்தேயு 17:4-9 பரிசுத்த பைபிள் (TAERV)
பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாம் இங்கு வந்தது நல்லதாயிற்று. நீர் விரும்பினால், நான் இங்கு மூன்று கூடாரங்களை அமைக்கிறேன். உமக்கு ஒன்று, மோசேக்கு ஒன்று, எலியாவிற்கு ஒன்று” என்று கூறினான். பேதுரு பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர்களுக்கு மேலாக ஒரு பிரகாசமான மேகம் வந்தது. மேகத்தினின்று ஒரு குரல் எழும்பி, “இவர் (இயேசு) எனது குமாரன். இவரிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நான் இவரிடம் பிரியமாக இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று சொன்னது. இயேசுவுடன் இருந்த சீஷர்கள் இதைக் கேட்டனர். மிகவும் பயந்து போன அவர்கள், தரையில் வீழ்ந்தார்கள். இயேசு அவர்களுக்கருகில் வந்து, அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்” எனக் கூறினார். தலையை உயர்த்திப் பார்த்த சீஷர்கள், இயேசு மட்டும் தனியே இருப்பதைக் கண்டார்கள். இயேசுவும் சீஷர்களும் மலையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள், “மலை மீது கண்டவற்றை யாரிடமும் கூறாதீர்கள். மரணத்திலிருந்து மனிதகுமாரன் உயிர்த்தெழும்வரைப் பொறுத்திருங்கள். பின்னர் நீங்கள் கண்டவற்றை மக்களிடம் கூறலாம்” என்று இயேசு சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
மத்தேயு 17:4-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான். அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார். அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.