மத்தேயு 16:1-4
மத்தேயு 16:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படிக் கேட்டு, அவரைச் சோதித்தார்கள். இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள். காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தை விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே! ஆனால் காலங்களின் அடையாளங்களை பகுத்தறிய உங்களால் முடியவில்லையே. இந்தப் பொல்லாதவரும் விபசாரக்காரருமான இந்தத் தலைமுறையினர் அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
மத்தேயு 16:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
மத்தேயு 16:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசுவைச் சோதிப்பதற்காகப் பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதம் நிகழ்த்துமாறு கேட்டனர். இயேசு அவர்களிடம், “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள். சூரிய உதயத்தைக் காலையில் காண்கிறீர்கள். அப்பொழுது வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். இவைகளை வானத்தில் கண்டு, அவற்றின் பொருளை அறிகிறீர்கள். அது போலவே, தற்பொழுது நடப்பவைகளை நீங்கள் காண்கிறீர்கள். இவைகளும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, யோனாவின் அடையாளத்தையன்றி வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறினார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார்.
மத்தேயு 16:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பரிசேயரும், சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? இந்தப் பொல்லாத விபசாரசந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார்.