மத்தேயு 13:24-43

மத்தேயு 13:24-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது. எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன. “வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும். அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’ ” இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது. அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார். இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை. இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.” அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே. வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள். அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். “களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள். இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.

மத்தேயு 13:24-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார். இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.

மத்தேயு 13:24-43 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார், “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது. அன்றைக்கு இரவில், அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவனது பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன. அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். “அதற்கு அவன், ‘ஒரு பகைவன் களைகளை விதைத்துவிட்டான்’ என்றான். “வேலைக்காரர்கள், ‘நாங்கள் களைகளை நீக்க வேண்டுமா?’ என்று கேட்டார்கள். “அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள். களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான்” என்று இயேசு கூறினார். பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான். விதைகளிலெல்லாம் மிகச் சிறியது கடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாக வளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன” என்றார். இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது” என்றார். இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார். இது தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னபடியே நடந்தது, “நான் உவமைகளின் வழியாகப் பேசுவேன், உலகம் வந்தது முதல் இரகசியமாயுள்ளவற்றை நான் சொல்வேன்” இயேசு மக்களை விட்டு வீட்டிற்குள் சென்றார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்து, “வயலில் முளைத்த களையின் உவமை கூறும் உண்மைப் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டனர். இயேசு மறுமொழியாக, “நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான். இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள். பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள். “களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும். மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள். அவர்களை அத்தேவ தூதர்கள் சூளையின் நெருப்பில் தள்ளுவார்கள். அங்கு அவர்கள் வேதனையால் கூக்குரலிடுவார்கள்; தங்கள் பற்களைக் கடிப்பார்கள். நல்ல மனிதர்கள் சூரியனைப்போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள்.

மத்தேயு 13:24-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார். இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.