மத்தேயு 13:18-23

மத்தேயு 13:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்: யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும். கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.”

மத்தேயு 13:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.

மத்தேயு 13:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)

“எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்: “சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்துகொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்துகொள்கிறான். “பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துத் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக்கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும்பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான். “முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை. “ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் நூறு மடங்கும் சில சமயம் அறுபது மடங்கும் சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்” என்றார்.

மத்தேயு 13:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்