மத்தேயு 12:15-21

மத்தேயு 12:15-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார். அவர், தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார். இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்தது: “இவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார்; நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே. இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன். இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார். இவர் வாக்குவாதம் செய்யமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள். நீதிக்கு வெற்றி கிடைக்கும்வரை, அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார். இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.”

மத்தேயு 12:15-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி, தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது: “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.

மத்தேயு 12:15-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பரிசேயர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு, அவ்விடத்தை விட்டு நீங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு நோயாளிகள் அனைவரையும் குணமாக்கினார். ஆனால், தான் யாரென்பதை மற்றவர்களிடம் கூறக் கூடாது என அவர்களை எச்சரித்தார். ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடக்கும்படிக்கு இயேசு இவ்வாறு செய்தார். ஏசாயா சொன்னது இதுவே, “இதோ என் ஊழியன். நான் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் இவரை நேசிக்கிறேன்; இவரைக்குறித்து நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் ஆவியை இவர்மேல் அமரச்செய்வேன். இவர் தேசங்களுக்கு (என்) நேர்மையான நியாயத்தைக் கூறுவார். இவர் வாக்குவாதம் செய்யார்; கூக்குரல் செய்யார். வீதிகளில் உள்ள மக்கள் இவர் குரலைக் கேளார். ஏற்கெனவே வளைந்த நாணலைக்கூட இவர் உடைக்கமாட்டார். அணையப்போகிற விளக்கைக்கூட இவர் அணைக்கமாட்டார். நியாயத்தீர்ப்பு செய்து முடிக்கும்வரை இவர் தம் முயற்சியில் தளரமாட்டார். எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.”

மத்தேயு 12:15-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி, தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது: இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே.