மத்தேயு 11:25-29

மத்தேயு 11:25-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது. ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது. “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள். “வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன்.

மத்தேயு 11:25-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

மத்தேயு 11:25-29 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு இயேசு, “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானவான்களிடமிருந்து மறைத்துள்ளீர். ஆனால் இவற்றைக் குழந்தையைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர். ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்” என்றார். “என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார். மேலும், பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரனும் போதனை செய்யத் தேர்ந்தெடுக்கிறார். “களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன். என் பணிகளை ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் பணிவும் கொண்டவன். உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள்.

மத்தேயு 11:25-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்