மத்தேயு 11:2-11
மத்தேயு 11:2-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான். அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள். அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ ‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’ என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது. “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்.
மத்தேயு 11:2-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து: வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்; குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான். பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன்.
மத்தேயு 11:2-11 பரிசுத்த பைபிள் (TAERV)
யோவான் ஸ்நானகன் சிறையிலிருந்தான். கிறிஸ்து செய்து கொண்டிருந்த பணிகளை யோவான் கேள்வியுற்றான். எனவே, யோவான் தனது சீஷர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பினான். யோவானின் சீஷர்கள் இயேசுவைக்கண்டு, “யோவான் வருவதாகக் கூறிய மனிதர் நீங்கள்தானா அல்லது நாங்கள் வேறொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள். குருடர்கள் பார்வை பெறுகிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள். தொழு நோயாளிகள் குணமாகிறார்கள். செவிடர்கள் கேட்கும் சக்தி பெறுகிறார்கள். இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்கள். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னை ஏற்றுக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்” என்று பதில் சொன்னார். யோவானின் சீஷர்கள் புறப்பட்டுப் போன பின்பு, இயேசு அங்கிருந்த மக்களிடம் யோவானைப் பற்றிப் பேசலானார். இயேசு அவர்களிடம், “வானாந்திரத்திற்கு எதைக் காண்பதற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலைக் காண்பதற்காகவா? இல்லை. உண்மையில் எதைக் காணச் சென்றீர்கள்? சிறந்த ஆடைகளை உடுத்திய மனிதனைக் காண்பதற்கா? இல்லை சிறந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிறவர்கள் அரண்மனைகளில்தான் வசிக்கிறார்கள். அப்படியானால் எதைக் காண வனாந்திரத்திற்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ஆம், நான் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் யோவான், மேலானவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் யோவானைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘கவனியுங்கள்! நான் என் உதவியாளை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன். உங்களுக்கான பாதையை அவன் தயார் செய்வான்.’” என்று கூறினார். “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், ஞானஸ்நானம் வழங்கும் யோவான் இவ்வுலகில் வாழ்ந்த எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவன். ஆனால், பரலோக இராஜ்யத்தில் மிகவும் அற்பமான மனிதன் கூட யோவானைக் காட்டிலும் முக்கியமானவன்.
மத்தேயு 11:2-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து: வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.