மத்தேயு 11:1-30

மத்தேயு 11:1-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார். யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான். அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள். அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ ‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’ என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது. “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான். யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது. வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்: “ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’ என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன். “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள். மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார். சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும். கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார். அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது. ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது. “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள். “வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன். எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”

மத்தேயு 11:1-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார். அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து: வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்; குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான். பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும். இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள். உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.

மத்தேயு 11:1-30 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கும் இவற்றைக் கூறி முடித்தார். பின்னர் அங்கிருந்து கலிலேயாவின் நகரங்களுக்குப் போதனை செய்வதற்காகச் சென்றார். யோவான் ஸ்நானகன் சிறையிலிருந்தான். கிறிஸ்து செய்து கொண்டிருந்த பணிகளை யோவான் கேள்வியுற்றான். எனவே, யோவான் தனது சீஷர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பினான். யோவானின் சீஷர்கள் இயேசுவைக்கண்டு, “யோவான் வருவதாகக் கூறிய மனிதர் நீங்கள்தானா அல்லது நாங்கள் வேறொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள். குருடர்கள் பார்வை பெறுகிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள். தொழு நோயாளிகள் குணமாகிறார்கள். செவிடர்கள் கேட்கும் சக்தி பெறுகிறார்கள். இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்கள். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னை ஏற்றுக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்” என்று பதில் சொன்னார். யோவானின் சீஷர்கள் புறப்பட்டுப் போன பின்பு, இயேசு அங்கிருந்த மக்களிடம் யோவானைப் பற்றிப் பேசலானார். இயேசு அவர்களிடம், “வானாந்திரத்திற்கு எதைக் காண்பதற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலைக் காண்பதற்காகவா? இல்லை. உண்மையில் எதைக் காணச் சென்றீர்கள்? சிறந்த ஆடைகளை உடுத்திய மனிதனைக் காண்பதற்கா? இல்லை சிறந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிறவர்கள் அரண்மனைகளில்தான் வசிக்கிறார்கள். அப்படியானால் எதைக் காண வனாந்திரத்திற்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ஆம், நான் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் யோவான், மேலானவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் யோவானைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘கவனியுங்கள்! நான் என் உதவியாளை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன். உங்களுக்கான பாதையை அவன் தயார் செய்வான்.’” என்று கூறினார். “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், ஞானஸ்நானம் வழங்கும் யோவான் இவ்வுலகில் வாழ்ந்த எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவன். ஆனால், பரலோக இராஜ்யத்தில் மிகவும் அற்பமான மனிதன் கூட யோவானைக் காட்டிலும் முக்கியமானவன். யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள். எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் எனச் சொல்கின்றன. என் பேச்சைக் கேட்பவர்களே, கவனியுங்கள். “இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து, “‘உங்களுக்காக இசைத்தோம், ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை. சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம், ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’ என்று அழைக்கிறது. “மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப்போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’, என்று சொல்கிறார்கள். மனிதகுமாரன் வந்திருந்து மற்றவர்களைப் போலவே உண்ணுகிறார்: திராட்சை இரசமும் குடிக்கிறார். மக்களோ, ‘அவரைப் பாருங்கள்!’ அதிகமாக உண்ணுகிறார். அதிகமாக திராட்சை இரசமும் குடிக்கிறார். வரி வசூலிப்பவர்களுக்கும் தீயவர்களுக்கும் அவர் நண்பர் என்று சொல்கிறார்கள். ஆனால் ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது.” பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இயேசு, “கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத் தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள். நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன். “கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும். ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்” என்று கூறினார். பிறகு இயேசு, “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானவான்களிடமிருந்து மறைத்துள்ளீர். ஆனால் இவற்றைக் குழந்தையைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர். ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்” என்றார். “என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார். மேலும், பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரனும் போதனை செய்யத் தேர்ந்தெடுக்கிறார். “களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன். என் பணிகளை ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் பணிவும் கொண்டவன். உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள். நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார்.

மத்தேயு 11:1-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப்போனார். அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து: வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம்பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார். கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.