மல்கியா 3:8-10

மல்கியா 3:8-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ஒரு மனிதன் இறைவனிடமிருந்து கொள்ளையிடுவானோ? எனினும் நீங்கள் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள். “ஆனால் நீங்களோ, ‘உம்மிடமிருந்து எப்படி நாங்கள் கொள்ளையடித்தோம்?’ என கேட்கிறீர்கள். “பத்தில் ஒரு பங்கிலும், காணிக்கைகளிலுமே என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள். நீங்கள் சாபத்துக்கு உட்பட்டவர்கள்; என்னிடமிருந்து கொள்ளையடிப்பதால் உங்கள் முழு தேசமும் சபிக்கப்பட்டதாகும். என் ஆலயத்தில் உணவு இருக்கும்படி, உங்கள் பத்தில் ஒரு பாகம் முழுவதையும் களஞ்சியத்திற்குக் கொண்டுவாருங்கள். இவ்வாறு என்னைச் சோதித்துப் பாருங்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்கள் இவ்வாறு செய்யும்போது, நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, நிறைந்து வழியும்படி இடங்கொள்ளாத அளவு அதிக ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழியமாட்டேனோ என்று பாருங்கள்.

மல்கியா 3:8-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; மக்களாகிய நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகும்வரை உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழியச்செய்யமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

மல்கியா 3:8-10 பரிசுத்த பைபிள் (TAERV)

“தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்!” நீங்கள், “நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்?” என்று கேட்கிறீர்கள். “நீங்கள் உங்களது பொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. இந்த வழியில் உங்கள் நாடு முழுவதும் என்னிடமிருந்து திருடினீர்கள். எனவே உங்களுக்குத் தீயவை ஏற்படுகிறது.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “இந்தச் சோதனையை முயற்சிச் செய்து பார். உன்னிடமுள்ளவற்றில் பத்தில் ஒரு பங்கை என்னிடம் கொண்டு வா. அவற்றைக் கருவூலத்தில் போடு. என் வீட்டிற்கு உணவு கொண்டு வா. என்னைச் சோதனை செய். நீ அவற்றைச் செய்தால் பின்னர் நான் உண்மையாக உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்திலிருந்து மழை பெய்வது போன்று நல்லவை உன்னிடம் வரும். உனக்கு தேவைக்கு அதிகமாகவே பொருள் வரும்.

மல்கியா 3:8-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.