லூக்கா 9:1-17

லூக்கா 9:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒன்றாய்க் கூப்பிட்டு, பிசாசுகளையெல்லாம் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார். அத்துடன், இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களை குணமாக்கவும், அவர் அவர்களை அனுப்பினார். இயேசு அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஊன்றுகோலையோ, பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ, கொண்டுபோக வேண்டாம். நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள். அங்கேயுள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிப் போடுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமங்கள்தோறும், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து, மக்களைச் சுகப்படுத்தினார்கள். சிற்றரசன் ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவான் இறந்தோரிலிருந்து உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான். வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் ஏரோது, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேனே. இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, அவரைப் பார்க்க முயற்சி செய்தான். அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார். ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, குணமடைய வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள். அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.

லூக்கா 9:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார். எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார். புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள். அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும், சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து: யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான். அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார். மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள். அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.

லூக்கா 9:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பன்னிரண்டு சீஷர்களையும் இயேசு ஒருங்கே வருமாறு அழைத்தார். நோய்களைக் குணமாக்கும் வல்லமையையும், பிசாசுகளை விரட்டும் அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்தார். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், நோயுற்றோரைக் குணமாக்கவும் இயேசு சீஷர்களை அனுப்பினார். அவர் சீஷர்களை நோக்கி, “நீங்கள் பயணம் செய்யும்போது கைத்தடியை எடுக்காதீர்கள். பையையோ, உணவையோ, பணத்தையோ எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள். ஏதாவது நகரத்து மக்கள் உங்களை வரவேற்காவிடில், அந்த நகரத்திற்கு வெளியே போய் உங்கள் பாதத்தில்பட்ட தூசிகளை உதறிவிடுங்கள். இது அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார். பின்பு சீஷர்கள் அங்கிருந்துச் சென்றனர். பல நகரங்கள் வழியாகப் பயணம் செய்தனர். எல்லா இடங்களிலும் நற்செய்தியைக் கூறி மக்களைக் குணப்படுத்தினர். இவ்வாறு நடந்துகொண்டிருந்த எல்லாச் செய்திகளையும் ராஜாவாகிய ஏரோது கேள்விப்பட்டான். சிலர் “யோவான் ஸ்நானகன் இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளான்” எனவும், வேறு சிலர், “எலியா மீண்டும் வந்துள்ளான்” எனவும் வேறு சிலர், “பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுள் ஒருவர் உயிரோடு எழுந்துள்ளார்” எனவும் கூறியதால் அவன் குழப்பமடைந்திருந்தான். ஏரோது, “யோவானின் தலையை வெட்டினேன். நான் கேள்விப்படும் இக்காரியங்களைச் செய்கின்ற மனிதன் யார்?” என்று சொன்னான். ஏரோதும் இயேசுவைப் பார்க்கத் தொடர்ந்து முயன்று வந்தான். சீஷர்கள் திரும்பி வந்ததும் தம் பயணத்தின்போது அவர்கள் செய்த செயல்கள் அனைத்தையும் இயேசுவிடம் சொன்னார்கள். பின்னர், இயேசு அவர்களை பெத்சாயிதா என்னும் நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இயேசுவும் சீஷர்களும் தனிமையில் ஒருமித்திருக்க முடிந்தது. ஆனால் இயேசு சென்ற இடத்தை மக்கள் அறிய நேர்ந்தது. அவர்கள் அவரைப் பின்பற்றி வந்தனர். இயேசு அவர்களை வரவேற்று தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து அவர்களுக்குக் கூறினார். நோயுற்றிருந்த மக்களைக் குணப்படுத்தினார். மதியத்திற்குப் பின்பு பன்னிரண்டு சீஷர்களும் இயேசுவிடம் வந்து, “இது மக்கள் வசிக்கிற இடம் அல்ல. மக்களை அனுப்பிவிடுங்கள். அவர்கள் உணவைத் தேடவும், இரவைக் கழிப்பதற்காக அக்கம் பக்கத்து நகரங்களிலும், பண்ணைகளிலும் இடம் தேடவும் வேண்டும்” என்றார்கள். ஆனால் இயேசு சீஷர்களை நோக்கி, “அவர்கள் உண்ணும்படியாக எதையாவது நீங்கள் கொடுங்கள்” என்றார். சீஷர்கள் “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாங்கள் உணவு வாங்கி வர முடியுமா?” என்று கேட்டனர். (அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தனர்.) இயேசு தன் சீஷர்களிடம், “மக்களிடம் ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக அமரும்படி கூறுங்கள்” என்றார். சீஷர்களும் அவ்வாறே கூற எல்லா மக்களும் அதன்படியே அமர்ந்தனர். அப்போது இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்தார். இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்னர் இயேசு உணவைப் பகிர்ந்து தன் சீஷர்களிடம் கொடுத்து, அவ்வுணவை மக்களுக்குக் கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். நிரம்ப உணவும் எஞ்சியது. சாப்பிடாது எஞ்சியதை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.

லூக்கா 9:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும்வேண்டாம். எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்ததூசியை உதறிப்போடுங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள். அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும், சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து: யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்கவிரும்பினான். அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார். சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள். ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்