லூக்கா 5:12-16

லூக்கா 5:12-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார். ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார்.

லூக்கா 5:12-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது. அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள். அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

லூக்கா 5:12-16 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருமுறை இயேசு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த மனிதன் ஒருவன் வாழ்ந்த ஒரு நகரத்தில் இருந்தார். அந்த மனிதனைத் தொழு நோய் பீடித்திருந்தது. அந்த மனிதன் இயேசுவைப் பார்த்ததும் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, “ஆண்டவரே, என்னைக் குணப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் என்னைக் குணமாக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று வேண்டினான். இயேசு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். இயேசு அவனைத் தொட்டார். உடனே தொழு நோய் அவனை விட்டு மறைந்தது. இயேசு அவனிடம், “இப்போது நடந்ததை யாருக்கும் சொல்லாதே. ஆனால் ஆசாரியனிடம் சென்று காட்டு. மோசே கட்டளையிட்டபடி நீ குணமாகியதற்கேற்ப தேவனுக்கு ஒரு காணிக்கை கொடு. இது நீ குணமாகியதை மக்களுக்குக் காட்டும்” என்றார். ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர். பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு, வேறு இடங்களுக்குச் சென்றார்.

லூக்கா 5:12-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள் அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்