லூக்கா 5:1-16

லூக்கா 5:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள். அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார். அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, “படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான். அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின. அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின. சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!” என்றான். அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள். சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார். எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார். ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார்.

லூக்கா 5:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் கெனேசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள். சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார். அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது. அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள். அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

லூக்கா 5:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

கெனெசரேத்து கடலின் அருகே இயேசு நின்றார். மக்கள் அவரைச் சுற்றி சூழ்ந்துகொண்டார்கள். தேவனுடைய போதனைகளைக் கேட்க அவர்கள் விரும்பினர். கடற்கரையில் இயேசு இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் தம் வலைகளைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். சீமோனுக்கு உரிய படகில் இயேசு ஏறிக்கொண்டார். படகைக் கரையிலிருந்து கடலுக்குள் சற்றுத் தள்ளி நிறுத்துமாறு இயேசு சீ மோனுக்குக் கூறினார். பிறகு மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். இயேசு போதித்து முடித்தார். அவர் சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார். சீமோன் பதிலாக, “ஐயா, மீன் பிடிப்பதற்காக இரவு முழுவதும் முயன்று பணி செய்தோம். ஆனால் மீன் எதுவும் அகப்படவில்லை. நான் நீருக்குள் வலை வீசவேண்டும் என்று நீர் கூறுகிறீர். நான் அவ்வாறே செய்வேன்” என்றான். மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின. தாங்கள் பிடித்த மிகுதியான மீன்களைக் கண்டு மீன் பிடிக்கிறவர்கள் ஆச்சரியப்பட்டனர். சீமோன் பேதுரு இதைக் கண்டபோது இயேசுவின் முன் தலை குனிந்து வணங்கி, “ஆண்டவரே, என்னிடமிருந்து போகவேண்டும். நான் பாவியான மனிதன்” என்றான். செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் கூட ஆச்சரியம் அடைந்தார்கள். (யாக்கோபும் யோவானும் பேதுருவுடன் சேர்ந்து உழைத்தனர்) இயேசு சீமோனை நோக்கி, “பயப்படாதே! இப்போதிலிருந்து மனிதரை ஒன்று சேர்க்கும்படியாக நீ வேலை செய்வாய், மீனைப்பிடிக்க அல்ல!” என்றார். அம்மனிதர்கள் படகைக் கரைக்கு இழுத்து வந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். ஒருமுறை இயேசு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த மனிதன் ஒருவன் வாழ்ந்த ஒரு நகரத்தில் இருந்தார். அந்த மனிதனைத் தொழு நோய் பீடித்திருந்தது. அந்த மனிதன் இயேசுவைப் பார்த்ததும் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, “ஆண்டவரே, என்னைக் குணப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் என்னைக் குணமாக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று வேண்டினான். இயேசு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். இயேசு அவனைத் தொட்டார். உடனே தொழு நோய் அவனை விட்டு மறைந்தது. இயேசு அவனிடம், “இப்போது நடந்ததை யாருக்கும் சொல்லாதே. ஆனால் ஆசாரியனிடம் சென்று காட்டு. மோசே கட்டளையிட்டபடி நீ குணமாகியதற்கேற்ப தேவனுக்கு ஒரு காணிக்கை கொடு. இது நீ குணமாகியதை மக்களுக்குக் காட்டும்” என்றார். ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர். பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு, வேறு இடங்களுக்குச் சென்றார்.

லூக்கா 5:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான். அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள் அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்