லூக்கா 24:1-12
லூக்கா 24:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள். அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல், அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள். அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்? அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா: ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள். அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன. அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள். மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள். அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது. ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
லூக்கா 24:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து, உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள். இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
லூக்கா 24:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
வாரத்தின் முதல் நாளில் அதிகாலைப் பொழுதில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் பெண்கள் வந்தார்கள். தாம் தயாரித்த மணமிக்க பொருட்களை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். ஒரு பெருங்கல் கல்லறையின் நுழை வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் உருண்டு போயிருந்ததை அப்பெண்கள் கண்டார்கள். அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை. அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள். அந்த இரு மனிதரும் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருக்கிற ஒருவரை ஏன் இங்கு தேடுகிறீர்கள்? இது இறந்தோருக்குரிய இடம். இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார். தீயோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார் எனவும், மூன்றாம் நாளில் மரணத்தின்று எழுவார் எனவும் இயேசு கலிலேயாவில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?” என்றார்கள். அப்போது இயேசு கூறியவற்றை அப்பெண்கள் நினைவுகூர்ந்தார்கள். அப்பெண்கள் கல்லறையை விட்டுப் போய், பதினொரு சீஷர்களும், மற்றவர்களும் இருக்கும் இடத்துக்குச் சென்றார்கள். கல்லறையின் அருகே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அப்பெண்கள் அவர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர். அப்பெண்கள் நடந்த அனைத்தையும் சீஷர்களுக்குச் சொன்னார்கள். அப்பெண்கள் கூறியவற்றை சீஷர்கள் நம்பவில்லை. அது விசித்திரமான பேச்சாக இருந்தது. ஆனால் பேதுரு எழுந்து அது உண்மையா எனப் பார்க்கக் கல்லறைக்கு ஓடினான். அவன் உள்ளே பார்த்து இயேசுவின் உடலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டான். இயேசுவைக் காணவில்லை. இயேசு சென்றுவிட்டிருந்தார். நடந்தவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டவனாகப் பேதுரு தனித்திருக்க விரும்பிச் சென்றான்.
லூக்கா 24:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.