லூக்கா 21:10-15
லூக்கா 21:10-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசு அரசிற்கெதிராய் எழும்பும். பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கர சம்பவங்களும், வானத்திலிருந்து பெரிய அடையாளங்களும் காணப்படும். “இவை எல்லாவற்றிற்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசருக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவை எல்லாம் என் பெயரின் பொருட்டு நிகழும். நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு, இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும். ஆனால், உங்கள் சார்பாக எப்படிப் பேசலாம் என்று முன்னதாகக் கவலைப்படாமல் இருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்கள் எதிரிகளில் எவனும் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ முடியாத அளவுக்கு, வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
லூக்கா 21:10-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: மக்களுக்கு எதிராக மக்களும், தேசத்திற்கு எதிராக தேசமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் அது நீங்கள் சாட்சி சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
லூக்கா 21:10-15 பரிசுத்த பைபிள் (TAERV)
பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும். “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். ராஜாக்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன்.
லூக்கா 21:10-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.