லூக்கா 20:20-26

லூக்கா 20:20-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். ஒற்றர்களோ, நீதிமான்களைப்போல் நடித்தார்கள். அவர்கள் இயேசுவை, அவர் சொல்லும் வார்த்தையினால் குற்றம் சாட்டி, அதன்படி அவரை ஆளுநரின் வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் ஒப்படைக்க நினைத்தார்கள். எனவே, அந்த ஒற்றர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகிறீர் என்றும், போதிக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பட்சபாதம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை சத்தியதின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். என்றும் அறிவோம். ரோம பேரரசன் சீசருக்கு நாங்கள் வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம், “ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். இந்த வெள்ளிக்காசிலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள். இயேசு அவர்களிடம், அப்படியானால் “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். மக்களுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமானார்கள்.

லூக்கா 20:20-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் நேரம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்திற்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாக நடிக்கிற ஒற்றர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாகப் பேசி உபதேசிக்கிறீரென்றும், பட்சபாதமில்லாமல் தேவனுடைய வழிமுறைகளை உண்மையாகப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம். இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரை மக்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன பதிலைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாக இருந்தார்கள்.

லூக்கா 20:20-26 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள். இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?” என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார். அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.

லூக்கா 20:20-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் சமயம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம். இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.