லூக்கா 17:1-5

லூக்கா 17:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ. இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும். எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள். “உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு. அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார். அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள்.

லூக்கா 17:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு இயேசு தம்முடைய சீடர்களை நோக்கி: இடறல்கள் வராமல் இருக்கமுடியாது, ஆனாலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறதைவிட, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் கடலில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாக இருக்கும். உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். அப்பொழுது அப்போஸ்தலர்கள் கர்த்த்தரை நோக்கி: எங்களுடைய விசுவாசத்தை பெருகப்பண்ணவேண்டும் என்றார்கள்.

லூக்கா 17:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்!” “உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார். சீஷர்கள் இயேசுவை நோக்கி, “இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள்” என்றார்கள்.

லூக்கா 17:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும். உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்