லூக்கா 16:19-31

லூக்கா 16:19-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

லூக்கா 16:19-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய், பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின. “காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான். அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான். “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான். “அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும். ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான். “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான். “அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான். “அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.”

லூக்கா 16:19-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று. பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக, நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

லூக்கா 16:19-31 பரிசுத்த பைபிள் (TAERV)

“விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின. “பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான். “ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான். “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள். எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான். “ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான். “ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான். “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்