லூக்கா 13:23-35

லூக்கா 13:23-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, ஒரு சிலர் மட்டும்தான் இரட்சிக்கப்படுவார்களோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு இப்படியாக பதிலளித்தார்: “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்வதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அநேகர் அதற்குள் செல்ல முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் முடியாதிருக்கும். வீட்டுச் சொந்தக்காரன் எழுந்து கதவை மூடியபின், நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டி, ‘ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்’ என்று கெஞ்சுவீர்கள். “ஆனால் அவரோ, ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது’ என்று சொல்வார். “அப்பொழுது நீங்கள் அவரைப் பார்த்து, ‘நாங்கள் உம்முடன் சாப்பிட்டுக் குடித்தோமே. நீர் எங்களுடைய வீதிகளில் போதித்தீரே’ என்பீர்கள். “ஆனால் உங்களிடம் அவர், ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. தீமை செய்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போங்கள்,’ என்று சொல்லுவார். “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, எல்லா இறைவாக்கினரும் இறைவனுடைய அரசில் இருப்பதையும், நீங்கள் புறக்கணிக்கப்படுவதையும் காணும்போது, அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் மக்கள் வந்து, இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள். உண்மையாகவே, இப்பொழுது கடைசியாய் இருப்பவர்கள் முதலாவதாகவும். முதலாவதாய் இருப்பவர்கள் கடைசியாய் இருப்பார்கள்” என்றார். அவ்வேளையில், சில பரிசேயர் இயேசுவிடம் வந்து அவரிடம், “நீர் இந்த இடத்தைவிட்டு வேறு எங்காவது போய்விடும். ஏரோது உம்மைக் கொலைசெய்ய இருக்கிறான்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “அந்த நரிக்குப் போய் சொல்லுங்கள், இன்றும் நாளையும் பிசாசுகளைத் துரத்தி, நான் மக்களைச் சுகப்படுத்துவேன். மூன்றாவது நாளிலே, நான் எனது பணியின் நோக்கத்தை செய்து முடிப்பேன். ஆனால் இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும், என் பணியைத் தொடர்வேன். ஏனெனில், நிச்சயமாகவே இறைவாக்கினன் எவனும் எருசலேமுக்கு வெளியே சாகமுடியாது. “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து உன்னிடம் அனுப்பப்பட்டவர்களை கல்லெறிகிற பட்டணமே, ஒரு கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழ் கூட்டிச் சேர்ப்பதுபோல் எத்தனையோமுறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், உனக்கோ விருப்பமில்லாமல் போயிற்றே. இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. நான் உனக்குச் சொல்கிறேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று நீ சொல்லும்வரைக்கும், இனிமேல் என்னைக் காணமாட்டாய்” என்றார்.

லூக்கா 13:23-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள். அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன். இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது. இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 13:23-35 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான். இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது. ஒரு மனிதன் தன் வீட்டின் கதவை மூடிக்கொண்டால் நீங்கள் வெளியே நின்று தட்டமுடியும். ஆனால் அவன் திறக்கமாட்டான். நீங்கள், ‘ஐயா, எங்களுக்காகக் கதவைத் திறக்கவும்’ என்று கேட்க முடியும். அம்மனிதன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது’ என்பான். பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள். அப்போது அவன், ‘உங்களை நான் அறியேன். எங்கிருந்து வருகிறீர்கள். என்னிடமிருந்து போய்விடுங்கள். நீங்கள் பிழைகளைச் செய்கிற மனிதர்கள்’ என்பான். “நீங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தீர்க்கதரிசிகளையும் தேவனின் இராஜ்யத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்களோ வெளியே விடப்படுவீர்கள். பயத்தாலும் கோபத்தாலும் உரக்கச் சத்தமிடுவீர்கள். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து மக்கள் வருவார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் மேசையருகே அவர்கள் அமர்வார்கள். வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்படும். இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் தாழ்ந்த இடத்தில் இருப்பார்கள்” என்று கூறினார். அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள். அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார். “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.

லூக்கா 13:23-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள. அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள். அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன். இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்