லூக்கா 12:1-3
லூக்கா 12:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள். மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும்.
லூக்கா 12:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும்.
லூக்கா 12:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார்.
லூக்கா 12:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.