லூக்கா 1:39-56

லூக்கா 1:39-56 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்; அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள். மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது! என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன். உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று. கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள். அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது. ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்; வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர். அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார். அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார். ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார். அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார். அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார். நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.

லூக்கா 1:39-56 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள். வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார். ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார். நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள். மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.

லூக்கா 1:39-56 பரிசுத்த பைபிள் (TAERV)

மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது. எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள். அப்போது மரியாள், “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது. தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது. நான் முக்கியமற்றவள், ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார். இப்போது தொடங்கி, எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர். ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார். அவர் பெயர் மிகத் தூய்மையானது. தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார். தேவனின் கைகள் பலமானவை. செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார். சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார். தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார். நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார். செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார். தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார். அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார். நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்” என்று சொன்னாள். மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.

லூக்கா 1:39-56 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்