லேவியராகமம் 9:1-7

லேவியராகமம் 9:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவன் மகன்களையும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களையும் அழைத்தான். அவன் ஆரோனிடம், “நீ உன்னுடைய பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு குறைபாடற்ற இளங்காளையையும், உன்னுடைய தகன காணிக்கைக்காக குறைபாடற்ற ஒரு ஆட்டுக் கடாவையும் எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக கொண்டுவா. பின்பு இஸ்ரயேலரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘பாவநிவாரண காணிக்கைக்காக வெள்ளாட்டுக்கடாவையும், தகன காணிக்கைக்காக கன்றுக்குட்டியையும், ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அவை இரண்டும் குறைபாடற்றதாயும், ஒரு வயதுடையதாயும் இருக்கவேண்டும். சமாதான காணிக்கைக்காக ஒரு மாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், எண்ணெய் கலந்து பிசைந்த தானியக் காணிக்கையுடன் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தும்படி கொண்டுவாருங்கள். ஏனெனில் இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார்’ என்று சொல்” என்றான். அவர்கள் மோசே கட்டளையிட்ட பொருட்களை சபைக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் அனைவரும் நெருங்கிவந்து, யெகோவா முன்னிலையில் நின்றார்கள். அப்பொழுது மோசே, “யெகோவாவின் மகிமை உங்களுக்குத் தோன்றும்படி, நீங்கள் செய்யவேண்டுமென யெகோவா கட்டளையிட்டது இதுவே” என்றான். மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தின் அருகில் வந்து பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் பலியிட்டு, உனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். மக்களுக்கான காணிக்கையைப் பலியிட்டு, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இவற்றைச் செய்” என்றான்.

லேவியராகமம் 9:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எட்டாம் நாளிலே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து, ஆரோனை நோக்கி: “நீ பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடக்கடவாய். மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடும்படி, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும், சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த உணவுபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார் என்று சொல்” என்றான். மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லோரும் சேர்ந்து, யெகோவாவுடைய சந்நிதியில் நின்றார்கள். அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; யெகோவாவுடைய மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான். மோசே ஆரோனை நோக்கி: “நீ பலிபீடத்தின் அருகில் வந்து, யெகோவா கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” என்றான்.

லேவியராகமம் 9:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

எட்டாவது நாள் மோசே ஆரோனையும் அவனது குமாரர்களையும், இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களையும் அழைத்தான். மோசே ஆரோனிடம், “பழுதற்ற ஒரு காளையையும், ஆட்டுக் கடாவையும் எடுத்துக் கொண்டு வா. பாவப் பரிகாரப் பலியாக காளையும், தகன பலியாக ஆட்டுக்கடாவும் இருக்கட்டும். கர்த்தருக்கு இந்த மிருகங்களைப் பலியாக அளிக்க வேண்டும். நீ இஸ்ரவேலரிடம் ஒரு வயதுள்ளதும், ‘பழுது இல்லாததுமான ஆட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாகவும், தகனபலியாகக் கன்றுகுட்டியையும், ஆட்டுக்குட்டியையும் சமாதானப் பலியாக ஒரு காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் கொண்டு வரும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. அந்த மிருகங்களையும், எண்ணெயிலே பிசைந்த தானியக் காணிக்கையையும் கர்த்தருக்குக் கொண்டு வாருங்கள்; ஏனென்றால் இன்று உங்களுக்கு கர்த்தர் தரிசனமாவார்’ என்று சொல்” என்றான். எனவே, அனைத்து ஜனங்களும் மோசே கட்டளையிட்டபடியே அவர்கள் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்துக்கு வந்து, கர்த்தரின் சந்நிதானத்தில் நின்றனர். மோசே அவர்களிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டும், பின்னர் கர்த்தரின் மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான். பிறகு மோசே ஆரோனிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி செய்வதற்காக பலிபீடத்தின் அருகில் போய் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்து. அது உன்னையும் ஜனங்களையும் தூய்மைப்படுத்தும். ஜனங்களின் பலிப் பொருட்களை எடுத்து அவர்களைச் சுத்தப்படுத்தும் செயல்களைச் செய்” என்றான்.

லேவியராகமம் 9:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து, ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய். மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும், சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான். மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள். அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான். மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.