லேவியராகமம் 26:14-21

லேவியராகமம் 26:14-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்த எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாமலும், என் விதிமுறைகளைப் புறக்கணித்து, என் சட்டங்களை வெறுத்து, என் கட்டளைகள் எல்லாவற்றையும் செய்யத்தவறி, என் உடன்படிக்கையை மீறுவீர்களானால், அப்பொழுது நான் உங்களுக்குச் செய்வதாவது: உங்கள்மேல் திடீர் பயங்கரத்தையும் அழிக்கும் வியாதிகளையும் கொண்டுவருவேன். உங்கள் கண் பார்வையை அற்றுப்போகச்செய்து, உங்கள் உயிரைக் குடிக்கும் காய்ச்சலையும் கொண்டுவருவேன். நீங்கள் தானியத்தை வீணாகவே விதைப்பீர்கள். ஏனெனில், உங்கள் பகைவர்களே அதைச் சாப்பிடுவார்கள். நான் என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்படுவீர்கள். உங்களை வெறுக்கிறவர்கள் உங்களை ஆளுவார்கள். ஒருவரும் உங்களைத் துரத்தாமலே நீங்கள் பயந்து ஓடுவீர்கள். “ ‘இவைகளெல்லாம் நடந்த பின்பும் நீங்கள் எனக்குச் செவிகொடாமற்போனால், நான் உங்களை உங்கள் பாவத்தின் நிமித்தம் ஏழுமடங்கு அதிகமாகத் தண்டிப்பேன். உங்கள் பிடிவாதமான பெருமையை உடைப்பேன். உங்கள் மேலிருக்கும் வானத்தை இரும்பைப்போலவும், கீழிருக்கும் நிலத்தை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். உங்கள் பெலன் வீணாகப் போகும். ஏனெனில், உங்கள் மண், விளைச்சலைக் கொடுக்காது. உங்கள் நாட்டின் மரங்கள் பழங்களைக் கொடுக்காது. “ ‘நீங்கள் என்னுடன் பகைமை பாராட்டி, தொடர்ந்து எனக்குச் செவிகொடுக்க மறுத்தால், உங்கள் பாவத்திற்குத்தக்கதாக உங்கள் வாதைகளை ஏழுமடங்காக அதிகரிப்பேன்.

லேவியராகமம் 26:14-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறுவீர்களென்றால்: நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள். நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் எதிரிகளுக்கு முன்பாக தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள். இந்தவிதமாக நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலிருந்தால், உங்கள் பாவங்களின் காரணமாக மேலும் ஏழுமடங்காக உங்களைத் தண்டித்து, உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். உங்கள் பெலன் வீணாகச் செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது. “நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல் வரச்செய்து

லேவியராகமம் 26:14-21 பரிசுத்த பைபிள் (TAERV)

“நீங்கள் எனக்கு கீழ்ப்படியாவிட்டாலோ அல்லது என் கட்டளையை பின்பற்றாவிட்டாலோ கீழ்க்கண்ட தீமைகள் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மறுத்தால் எனது உடன்படிக்கையை மீறினவர்களாக மாறுகிறீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் நான் உங்களுக்கு மோசமான தீமைகளை உருவாக்குவேன். நோய்களையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரச் செய்வேன். அவை உங்கள் கண்களையும் ஜீவனையும் கெடுக்கும். நீங்கள் செய்யும் பயிர் விளைச்சலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. உங்கள் பகைவர்கள் உங்களது விளைச்சலை உண்பார்கள். நான் உங்களுக்கு எதிராக இருப்பேன். எனவே உங்களை உங்கள் எதிரிகள் வெல்வார்கள். அவர்கள் உங்களை வெறுத்து ஆட்சி செலுத்துவார்கள். உங்களை எவரும் துரத்தாவிட்டாலும் நீங்கள் பயந்து ஓடுவீர்கள். “இவற்றுக்குப் பிறகும் நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். உங்கள் பெருமைக்குரிய பெரிய நகரங்களையெல்லாம் அழிப்பேன். வானம் உங்களுக்கு மழையைத் தராது. நிலம் விளைச்சலைத் தராது. நீங்கள் கடினப்பட்டு உழைப்பீர்கள், ஆனால் விளைச்சல் கிடைக்காது. உங்கள் மரங்களும் பழங்களைத் தராது. “அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும்.

லேவியராகமம் 26:14-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படி.யும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்: நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள். நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள். இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து, உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது. நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி