லேவியராகமம் 19:9-37
லேவியராகமம் 19:9-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ ‘நீங்கள் உங்கள் வயலின் விளைச்சலை அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் இருக்கும் கதிர்களை முற்றிலுமாக அறுவடை செய்யாமலும், சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். அப்படியே உங்கள் திராட்சைத்தோட்டத்திலும், இரண்டாம்முறை பறிக்காமலும், விழுந்ததைப் பொறுக்காமலும் விடுங்கள். அவைகளை ஏழைகளுக்கும் பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘களவு செய்யவேண்டாம். “ ‘பொய் சொல்லவேண்டாம். “ ‘ஒருவரையொருவர் ஏமாற்றவேண்டாம். “ ‘என் பெயரைக்கொண்டு பொய்யாய் ஆணையிடுவதினால் உங்கள் இறைவனின் பெயருக்கு இழிவு உண்டாக்க வேண்டாம். நானே யெகோவா. “ ‘நீங்கள் உங்கள் அயலானை மோசடி செய்து, அவனைக் கொள்ளையிடாதீர்கள். “ ‘கூலிக்காரனுடைய கூலியை அடுத்தநாள்வரை கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம். “ ‘செவிடனை சபிக்காமலும், குருடனின் வழியில் தடையேதும் போடாமலும் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே யெகோவா. “ ‘நீதியைப் புரட்டவேண்டாம்; ஏழையை ஒடுக்கவேண்டாம். செல்வந்தர்களுக்குச் சலுகைகாட்ட வேண்டாம். ஆனால் உங்கள் அயலானுக்கு நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள். “ ‘நீங்கள் உங்கள் மக்களுக்குள் அவதூறு பேசுகிறவர்களாகத் திரியாதீர்கள். “ ‘உங்கள் அயலானின் உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் எதையும் செய்யவேண்டாம். நானே யெகோவா. “ ‘உங்கள் இருதயத்தில் உங்கள் சகோதரனை வெறுக்க வேண்டாம். உங்கள் அயலானின் குற்றத்தில் நீங்களும் பங்குகொள்ளாதபடி அவனை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளுங்கள். “ ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா. “ ‘நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும். “ ‘வெவ்வேறு வகையான மிருகங்களை ஒன்றோடு ஒன்று புணரவிடவேண்டாம். “ ‘இரண்டு வகையான விதைகளை ஒன்றாய் கலந்து வயலில் விதைக்கவும் வேண்டாம். “ ‘இரண்டு வகையான நூல்களைக்கொண்டு நெய்யப்பட்ட உடைகளை உடுத்தவேண்டாம். “ ‘மீட்டுக்கொள்ளப்படாமலும், விடுதலை அடையாமலும் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு அடிமைப் பெண்ணுடன் வேறு யாராவது உறவுகொண்டால், அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனெனில், அவள் விடுதலை பெற்றிருக்கவில்லை. ஆனாலும் அவன் தான் செய்த குற்றத்திற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவை குற்றநிவாரண காணிக்கையாக யெகோவா முன்னிலையில் சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அக்குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டு அவன் செய்த பாவத்திற்காக யெகோவா முன்னிலையில், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். “ ‘நீங்கள் உங்கள் நாட்டிற்குள்போய் கனிகொடுக்கும் மரங்களை நாட்டும்போது, அதன் பழங்களை உண்பதற்கு, முதல் மூன்று வருடங்களும் தடை செய்யப்பட்டவைகளாக எண்ணிக்கொள்ளுங்கள்; அவற்றைச் சாப்பிடக்கூடாது. நான்காம் வருடத்தில் அதன் பழங்கள் எல்லாம் பரிசுத்தமாய் இருக்கும். அவை யெகோவாவுக்குத் துதியின் காணிக்கையாகும். ஆனால் ஐந்தாம் வருடத்தில் உண்டாகும் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். இவ்வாறாக உங்கள் அறுவடை பெருகும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘எந்த இறைச்சியையும் அதன் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். “ ‘குறி கேட்கவோ, சகுனம் பார்க்கவோ வேண்டாம். “ ‘உங்கள் தலைமுடியின் ஓரங்களை வெட்டாமலும், உங்கள் தாடியின் ஓரங்களைக் கத்தரியாமலும் இருங்கள். “ ‘இறந்தவர்களுக்காக உங்கள் உடல்களைக் கீறி காயப்படுத்தவேண்டாம். உங்கள் உடல்களில் பச்சை குத்தவும் வேண்டாம். நான் யெகோவா. “ ‘நீங்கள் உங்கள் மகளை வேசியாக்குவதினால், அவளை இழிவுபடுத்தாதீர்கள். மீறினால், நாடு வேசித்தனத்திற்குத் திரும்பி, கொடுமையினால் நிறையும். “ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா. “ ‘அஞ்சனம் பார்க்கிறவர்களின் பக்கம் போகவேண்டாம். குறிசொல்லுகிறவர்களை தேடவும் வேண்டாம். ஏனெனில், இவற்றால் நீங்கள் அசுத்தமடைவீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘வயதானவர்களின் முன் எழுந்து நில்லுங்கள். முதியோருக்கு மரியாதை செலுத்துங்கள். உங்கள் இறைவனிடத்தில் பயபக்தியாயிருங்கள். நானே யெகோவா. “ ‘ஒரு பிறநாட்டினன் உங்கள் நாட்டில் உங்களுடன் தங்கியிருந்தால், அவனை ஒடுக்காதீர்கள். உங்களோடு வாழும் எந்த பிறநாட்டினனும் உங்களுடைய நாட்டினனைப்போல நடத்தப்படவேண்டும். உங்களைப்போல் அவனிலும் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் முன்பு ஒருகாலத்தில் நீங்களும் எகிப்து நாட்டில் பிறநாட்டினராய் இருந்தீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘நீளம், நிறை, கொள்ளளவு ஆகியவற்றை அளக்கும்போது, நீதியற்ற அளவுகளைப் பயன்படுத்த வேண்டாம். சரியான தராசையும், சரியான படிக்கற்களையும், சரியான எப்பா அளவையும் சரியான ஹின் அளவையும் பயன்படுத்த வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘ஆகவே நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும், என்னுடைய எல்லா சட்டங்களையும் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா’ ” என்றார்.
லேவியராகமம் 19:9-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா. “பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது. செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் யெகோவா. “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா. “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும். பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா. “என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல. அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். “நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும். பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் யெகோவாவுக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும். ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக. உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும், செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா. “தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே. என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா. “மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனப்படுத்தி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் யெகோவா. “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக. நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா. ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.
லேவியராகமம் 19:9-37 பரிசுத்த பைபிள் (TAERV)
“அறுவடைக் காலத்தில் நீங்கள் விளைந்த பயிரை அறுவடை செய்யும்போது வயலின் எல்லாப் பகுதிகளையும் மூலைகளையும் சேர்த்து அறுக்காதீர்கள். தானியங்கள் தரையில் சிதறுமானால் அவற்றைச் சேகரித்து அள்ளிக்கொள்ளாதீர்கள். உங்கள் திராட்சைக் கொடியில் உள்ள அனைத்து திராட்சைப் பழங்களையும் பறிக்காதீர்கள். தரையில் விழும் திராட்சைப் பழங்களையும் பொறுக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். “நீங்கள் திருடக்கூடாது. நீங்கள் ஜனங்களை ஏமாற்றவும் கூடாது. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்தி பொய் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தேவனின் பெயரை மதிக்காமல் இருக்கிறீர்கள். நானே கர்த்தர். “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள். “செவிடர்களை நீங்கள் சபிக்காதீர்கள். குருடன் விழுந்துவிடும்படி அவன் எதிரே எதுவும் போடாதீர்கள். உங்கள் தேவனுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும். நானே கர்த்தர்! “நீங்கள் நியாயத்தீர்ப்பில் நடுநிலையுடன் இருங்கள். ஒருவன் ஏழை என்பதினால் சிறப்பான சலுகையோ அல்லது ஒருவர் முக்கியமான மனிதர் என்பதினால் விசேஷ சலுகையோ செய்யக் கூடாது. உனது அயலானுக்குத் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையில் இருந்து சொல்ல வேண்டும். மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்! “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்! “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இருவிதமான மிருகங்களைச் சேர்த்து இனப்பெருக்கம் செய்யக்கூடாது. உங்களது வயலில் இரண்டுவிதமான விதைகளை விதைக்கக்கூடாது. இரண்டு விதமான நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது. “அடுத்தவனிடம் அடிமையாய் இருக்கிற ஒரு பெண்ணுடன் ஒருவன் பாலியல் உறவுகொள்ள நேரிடலாம். ஆனால் அவளை வாங்கவோ அவளுக்குச் சுதந்திரம் அளிக்கவோ முடியாது. இவ்வாறு நடந்தால் இது தண்டனைக்குரியது. ஆனால் இது மரணத்திற்குரியது அல்ல. ஏனென்றால் அவள் சுதந்திரமானவள் அல்ல. அவன் குற்றபரிகார பலியாக ஆட்டுக்கடா ஒன்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரவேண்டும். அவன் சுத்திகரிக்கப்படும்படி ஆசாரியன் பாவ நிவிர்த்தி செய்வான். கர்த்தருக்கு முன்பாக ஆசாரியன் ஆட்டுக்கடாவை குற்றபரிகார பலியாகச் செலுத்த வேண்டும், அப்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்படும். “வருங்காலத்தில் உங்கள் நாட்டுக்குள் நுழைந்த பின்பு உணவுக்காகப் பலவிதமான மரங்களை நீங்கள் நடுவீர்கள். ஒரு மரத்தை நட்டபிறகு மூன்று வருடத்திற்கு அதிலுள்ள பழங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். நான்காவது ஆண்டில் கிடைக்கும் பழங்கள் கர்த்தருக்குரியவை. அவற்றப் பரிசுத்தக் காணிக்கையாக கர்த்தரைத் துதிப்பதற்காகக் கொடுக்க வேண்டும். ஐந்தாவது ஆண்டில் அம்மரத்திலுள்ள கனியை நீங்கள் உண்ணலாம். அம்மரம் உங்களுக்காக மேலும், மேலும் பழங்களைத் தரும். உனது தேவனாகிய கர்த்தர் நானே. “இரத்தம் இருக்கிற இறைச்சியை நீங்கள் உண்ணக் கூடாது. “மாயவேலைகளைப் பயன்படுத்தவோ, அல்லது எதிர்காலத்தைப்பற்றி அறிய மந்திர, தந்திர வழிகளில் முயற்சி செய்யவோ கூடாது. “உன் முகத்தில் வளருகிற முடியையும், தாடியையும் மழிக்கக் கூடாது. மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர். “உனது குமாரத்தி வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது. “எனது ஓய்வு நாளில் நீங்கள் வேலை செய்யக்கூடாது. என் பரிசுத்தமான இடத்தை நீங்கள் மதிக்க வேண்டும். நானே கர்த்தர். “மந்திரவாதிகளிடமும் செத்தவர்களிடமும் தொடர்புகொள்வதாகக் கூறுபவர்களிடமும் புத்திமதி கேட்டு செல்லாதீர்கள். அவர்கள் உங்களைத் தீட்டுப்படுத்துவார்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். “முதியவர்களுக்கு மரியாதை கொடு. அவர்கள் அறைக்குள் வரும்போது எழுந்து நில். உங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துங்கள். நானே கர்த்தர். “உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே. நீ உனது நாட்டாரை மதிப்பதுபோலவே அந்நியர்களையும் மதிக்க வேண்டும். நீ உன்னையே நேசிப்பது போல அந்நியர்களையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நீங்களும் முன்பு எகிப்தில் அந்நியராயிருந்தீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். “நியாய விசாரணையின்போது நடு நிலமையில் இருங்கள். அளக்கும்போதும், நிறுக்கும்போதும் நேர்மையாக இருங்கள். உங்கள் கூடைகளும், ஜாடிகளும் சரியான அளவுள்ளவையாக இருக்கட்டும். உங்கள் எடைக் கற்களும், தராசும் பொருட்களைச் சரியாக எடை போடட்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எகிப்திலிருந்து உங்களை நானே வெளியே அழைத்து வந்தேன். “எனது கட்டளைகளையும், எனது விதிகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நானே கர்த்தர்” என்று கூறினார்.
லேவியராகமம் 19:9-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர். பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர். நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர். உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும். பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர். என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக. ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல. அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் அந்த தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும். பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும். ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக. உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும், செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர். தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர். அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர். யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக. சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர். ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.