லேவியராகமம் 19:9-18

லேவியராகமம் 19:9-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘நீங்கள் உங்கள் வயலின் விளைச்சலை அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் இருக்கும் கதிர்களை முற்றிலுமாக அறுவடை செய்யாமலும், சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். அப்படியே உங்கள் திராட்சைத்தோட்டத்திலும், இரண்டாம்முறை பறிக்காமலும், விழுந்ததைப் பொறுக்காமலும் விடுங்கள். அவைகளை ஏழைகளுக்கும் பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘களவு செய்யவேண்டாம். “ ‘பொய் சொல்லவேண்டாம். “ ‘ஒருவரையொருவர் ஏமாற்றவேண்டாம். “ ‘என் பெயரைக்கொண்டு பொய்யாய் ஆணையிடுவதினால் உங்கள் இறைவனின் பெயருக்கு இழிவு உண்டாக்க வேண்டாம். நானே யெகோவா. “ ‘நீங்கள் உங்கள் அயலானை மோசடி செய்து, அவனைக் கொள்ளையிடாதீர்கள். “ ‘கூலிக்காரனுடைய கூலியை அடுத்தநாள்வரை கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம். “ ‘செவிடனை சபிக்காமலும், குருடனின் வழியில் தடையேதும் போடாமலும் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே யெகோவா. “ ‘நீதியைப் புரட்டவேண்டாம்; ஏழையை ஒடுக்கவேண்டாம். செல்வந்தர்களுக்குச் சலுகைகாட்ட வேண்டாம். ஆனால் உங்கள் அயலானுக்கு நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள். “ ‘நீங்கள் உங்கள் மக்களுக்குள் அவதூறு பேசுகிறவர்களாகத் திரியாதீர்கள். “ ‘உங்கள் அயலானின் உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் எதையும் செய்யவேண்டாம். நானே யெகோவா. “ ‘உங்கள் இருதயத்தில் உங்கள் சகோதரனை வெறுக்க வேண்டாம். உங்கள் அயலானின் குற்றத்தில் நீங்களும் பங்குகொள்ளாதபடி அவனை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளுங்கள். “ ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா.

லேவியராகமம் 19:9-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா. “பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது. செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் யெகோவா. “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா. “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும். பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.

லேவியராகமம் 19:9-18 பரிசுத்த பைபிள் (TAERV)

“அறுவடைக் காலத்தில் நீங்கள் விளைந்த பயிரை அறுவடை செய்யும்போது வயலின் எல்லாப் பகுதிகளையும் மூலைகளையும் சேர்த்து அறுக்காதீர்கள். தானியங்கள் தரையில் சிதறுமானால் அவற்றைச் சேகரித்து அள்ளிக்கொள்ளாதீர்கள். உங்கள் திராட்சைக் கொடியில் உள்ள அனைத்து திராட்சைப் பழங்களையும் பறிக்காதீர்கள். தரையில் விழும் திராட்சைப் பழங்களையும் பொறுக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். “நீங்கள் திருடக்கூடாது. நீங்கள் ஜனங்களை ஏமாற்றவும் கூடாது. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்தி பொய் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தேவனின் பெயரை மதிக்காமல் இருக்கிறீர்கள். நானே கர்த்தர். “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள். “செவிடர்களை நீங்கள் சபிக்காதீர்கள். குருடன் விழுந்துவிடும்படி அவன் எதிரே எதுவும் போடாதீர்கள். உங்கள் தேவனுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும். நானே கர்த்தர்! “நீங்கள் நியாயத்தீர்ப்பில் நடுநிலையுடன் இருங்கள். ஒருவன் ஏழை என்பதினால் சிறப்பான சலுகையோ அல்லது ஒருவர் முக்கியமான மனிதர் என்பதினால் விசேஷ சலுகையோ செய்யக் கூடாது. உனது அயலானுக்குத் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையில் இருந்து சொல்ல வேண்டும். மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்! “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்!

லேவியராகமம் 19:9-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர். பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர். நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர். உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும். பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்