லேவியராகமம் 11:1-40 - Compare All Versions
லேவியராகமம் 11:1-40 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மீண்டும் யெகோவா மோசேயுடனும் ஆரோனுடனும் பேசி, “நீங்கள் இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பூமியில் வாழும் எல்லா மிருகங்களுக்குள்ளும் நீங்கள் சாப்பிடக் கூடியவைகள் இவையே: முழுவதும் விரிந்த குளம்புடையதும், இரையை அசைப்போடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம். “ ‘சில மிருகங்கள் இரையை அசைப்போடுகிறதாய் மட்டும் இருக்கின்றன, சில மிருகங்கள் விரிந்த குளம்பு உடையதாய் மட்டும் இருக்கின்றன, அவற்றை நீங்கள் சாப்பிடக்கூடாது. ஒட்டகம் இரையை அசைப்போடுகிறதாய் இருந்தாலும் அதற்கு விரிந்த குளம்பு இல்லாதபடியால், அது சம்பிரதாய முறைப்படி உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. அதேபோல், குழிமுயலானது இரையை அசைப்போடுகிறதாய் இருந்தாலும், விரிந்த குளம்பு இல்லாதபடியால், அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. முயல் இரையை அசைப்போடுகிறதாய் இருந்தும், விரிந்த குளம்பு இல்லாதபடியால், அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. பன்றி, விரிந்த குளம்புடையதாயிருந்தாலும், இரையை அசைப்போடுகிறதில்லை; ஆதலால் அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அவற்றின் பிணங்களைத் தொடவும் கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. “ ‘கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீரில் வாழ்கின்ற உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம். கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீரில் வாழ்கின்ற உயிரினங்களுக்குள்ளே துடுப்புகளும், செதில்களும் இல்லாத எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்கவேண்டும். நீங்கள் அவற்றை அருவருக்கவேண்டும் என்பதால், அவைகளின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அவற்றின் செத்த உடல்களை நீங்கள் அருவருத்து ஒதுக்க வேண்டும். நீரில் வாழ்கின்ற துடுப்புகளும், செதில்களும் இல்லாதவையெல்லாம் உங்களுக்கு அருவருப்பாய் இருக்கவேண்டும். “ ‘பறவைகளில் நீங்கள் அருவருக்கவேண்டியதும், அருவருப்பாய் இருப்பதால் சாப்பிடாமல் தவிர்க்கவேண்டியதும் இவையே: கழுகு, கருடன், கடலூராஞ்சி, செம்பருந்து எல்லாவித வல்லூறுகள், எல்லாவித அண்டங்காக்கைகள், கொம்பு ஆந்தை, அலறும் ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள், சின்ன ஆந்தை, நீர்க்காகம், பெரிய ஆந்தை, வெள்ளை ஆந்தை, பாலைவன ஆந்தை, மீன்கொத்தும் பெரிய பறவை, கொக்கு, எல்லாவித நாரைகள், புழுக்கொத்தி, வவ்வால் என்பனவாகும். “ ‘பறக்கும் பூச்சி வகைகளில் நான்கு கால்களால் நடக்கின்ற யாவும் உங்களுக்கு அருவருப்பானவை. ஆனாலும், நீங்கள் சாப்பிடக்கூடிய நான்கு கால்களால் நடக்கும் சிறகுகளை உடைய சில உயிரினங்களாவன: தரையில் தத்திப்பாயக்கூடிய இணைக்கப்பட்ட கால்களையுடையவை. இவைகளில் நீங்கள், எல்லா வகையான வெட்டுக்கிளிகளையும், பச்சை வெட்டுக்கிளிகளையும், சில்வண்டுகளையும், விட்டில்களையும் சாப்பிடலாம். ஆனால் நான்கு கால்களையும், சிறகுகளையும் உடைய மற்ற எல்லா பூச்சிகளையும் நீங்கள் அருவருக்கவேண்டும். “ ‘இவற்றால் உங்களை நீங்கள் அசுத்தமாக்கிக்கொள்வீர்கள். அவற்றின் செத்த உடல்களைத் தொடுகிற எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவற்றின் செத்த உடலை எடுக்கிறவன் எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான். “ ‘விரிந்த குளம்பு இல்லாததும், இரையை அசைப்போடுகிறதுமான மிருகங்கள் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். அவற்றின் பிணங்களைத் தொடுகிற எவனும் அசுத்தமாயிருப்பான். நான்கு கால்களால் நடக்கும் எல்லா மிருகங்களுக்குள்ளும் பாதங்களை ஊன்றி நடக்கின்ற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்க வேண்டும்; அவற்றின் பிணங்களைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவற்றின் பிணங்களைத் தூக்குகிற எவனும், தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவை உங்களுக்கு அசுத்தமானவை. “ ‘தரையில் ஊரும்பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள்: மரநாய், எலி, எல்லா வகையான ஓணான், மரப்பல்லி, உடும்பு, பல்லி, அரணை, பச்சோந்தி என்பனவாகும். ஊரும்பிராணிகளில் இவையெல்லாம் உங்களுக்கு அசுத்தமானவை. இவற்றிலும் செத்ததைத் தொடுகிறவன் சூரியன் மறையும்வரை அசுத்தமாயிருப்பான். அவைகளில் ஒன்று செத்து மரப்பாத்திரத்திலோ, உடையிலோ, தோலிலோ, சாக்குப்பையிலோ, பயன்படுத்தும் எந்தப் பாத்திரத்திலாவது விழுந்தால், அவை அசுத்தமாயிருக்கும். அதை தண்ணீரில் போடுங்கள். அவை மாலைவரை அசுத்தமாயிருக்கும். பின்பு அவை சுத்தமாகும். அவைகளில் ஒன்று மண்பானைக்குள் விழுமானால், அதிலுள்ள அனைத்தும் அசுத்தமாகும். எனவே அந்தப் பானையை உடைக்கவேண்டும். அந்தப் பானையிலிருந்து தண்ணீர் எந்த உணவிலாவது பட்டுவிட்டால், அது அசுத்தமாயிருக்கும். அதிலிருந்து குடிக்கும் எந்தவித பானமும் அசுத்தமாயிருக்கும். செத்தவைகளில் ஒன்று எதில் விழுந்தாலும், அது அசுத்தமாயிருக்கும். அடுப்பிலோ அல்லது சட்டியிலோ விழுந்தால், அவை உடைக்கப்பட வேண்டும். அவை அசுத்தமானவை. அவற்றை நீங்கள் அசுத்தமாக எண்ணவேண்டும். ஆனாலும் செத்ததில் ஒன்று நீரூற்றிலோ, தண்ணீர் சேமிக்கும் தொட்டியிலோ விழுந்தால், அவை அசுத்தமாகாது. அதற்குள் செத்துக்கிடப்பதைத் தொடுகிறவன் அசுத்தமாய் இருக்கிறான். அது விதைக்க வைத்திருக்கும் எந்தத் தானியத்தின்மேல் விழுந்தாலும் சுத்தமாகவே இருக்கும். ஆகிலும் தானியம் நீரில் நனைக்கப்பட்டிருக்கும் போது, அது தானியத்தின்மேல் விழுந்தால், அந்தத் தானியம் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். “ ‘ஆகிலும், நீங்கள் சாப்பிடும்படி அனுமதிக்கப்பட்ட ஒரு மிருகம் இறந்தால், அந்தப் பிணத்தைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை அசுத்தமாய் இருப்பான். அந்தப் பிணத்தில் எதையாவது சாப்பிடுகிறவன் எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான். அந்தப் பிணத்தைத் தூக்குகிற எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
லேவியராகமம் 11:1-40 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் சாப்பிடத்தக்க உயிரினங்கள் எவைகள் என்றால்: மிருகங்களில் விரிகுளம்புள்ளதாக இருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிற அனைத்தையும் நீங்கள் சாப்பிடலாம். ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாததால், அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். குழிமுயலானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். முயலானது அசைபோடுகிறதாக இருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாக இருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். இவைகளின் மாம்சத்தைச் சாப்பிடவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. தண்ணீரிலிருக்கிறவைகளில் நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம். ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக. தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. “பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், பருந்தும், சகலவித வல்லூறும், சகலவித காகங்களும், தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும், ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும், நாரையும், கூழக்கடாவும், குருகும், கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே. “பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே, வெட்டுக்கிளி வகையாக இருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிவகையாக இருக்கிறதையும் நீங்கள் சாப்பிடலாம். பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. “அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான். நான்கு கால்களால் நடக்கிற சகல உயிரினங்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. “தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும், உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே. சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். அவைகளில் செத்தது, எதன்மேல் விழுந்தாலும் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் மாலைவரைத் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும். அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும். சாப்பிடத்தக்க உணவுபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும். அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. ஆனாலும், நீரூற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான். மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது. அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. “உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். அதின் மாம்சத்தைச் சாப்பிட்டவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துக்கொண்டுபோனவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 11:1-40 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் கூற வேண்டியதாவது: நீங்கள் உண்ணத்தக்க மிருகங்கள் பின்வருவனவாகும், இரண்டாகப் பிளந்த குளம்புடைய மற்றும் அசைபோடும் மிருகங்களின் இறைச்சியை உண்ணலாம். “சில மிருகங்கள் அசைபோடும். ஆனால் அவற்றுக்குப் பிளந்த குளம்புகள் இருக்காது. அவற்றை நீங்கள் உண்ணக் கூடாது. ஒட்டகம், குழிமுயல், முயல் ஆகிய மிருகங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. அவை தீட்டு உள்ளவை. இன்னும் சில மிருகங்களுக்குக் குளம்புகள் விரிந்திருக்கும். ஆனால் அசை போடாது. அவற்றையும் நீங்கள் உண்ணக் கூடாது. பன்றிகள் இத்தகையவை. எனவே இவை தீட்டுள்ளவை. அவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள்! அவற்றின் பிணத்தையும் தொடாதீர்கள்! அவை உங்களுக்குத் தீட்டுள்ளவை! “சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ வாழ்ந்து அவற்றுக்குச் செதில்களும், சிறகுகளும் இருந்தால் அவற்றை நீங்கள் உண்ணலாம். ஆனால் சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ, வாழ்ந்தும் அவற்றுக்குச் செதில்களும் சிறகுகளும் இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது. கர்த்தர் இத்தகைய மிருகங்கள் உண்பதற்குத் தகுந்தவையல்ல என்கிறார். இவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள். இவற்றின் பிணத்தைத் தொடவும் கூடாது. எனவே தண்ணீரில் வாழ்ந்தும் செதில்களும், சிறகுகளும் இல்லாத மிருகங்களை தேவன் சொன்னபடி உண்ணத் தகாதவை என்று கருதுங்கள். “தேவன் உண்ணத்தகாத மிருகங்களைப்பற்றி சொன்னது போலவே உண்ணத்தகாத பறவைகளைப்பற்றியும் கூறியிருக்கிறார். அதாவது கழுகு, கருடன், கடலுராஞ்சி, பருந்து, வல்லூறு வகைகள், காக வகைகள், நெருப்புக் கோழி, கூகை, செம்புகம், டேகை, ஆந்தைகள், நீர்க்காகம், கோட்டான், நாரை, கூழக்கடா, குருகு, கொக்கு, ராஜாளி வகைகள், புழுக்கொத்தி, வௌவால் ஆகியவற்றை நீங்கள் உண்ணக் கூடாது. “சிறகும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் நீங்கள் தரையிலே தாவுவதற்கேற்ற வகையில் கால்களுக்கு மேல் தொடைகளைக் கொண்டவற்றை உண்ணலாம். வெட்டுக்கிளி வகைகளையும், சோலையாம் என்னும் கிளி வகைகளையும் அர்கொல், ஆகாபு என்னும் கிளி வகைகளையும் நீங்கள் உண்ணலாம். “ஆனால் சிறகுகளும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை, கர்த்தர் உண்ணக் கூடாது என்றார். அப்பூச்சிகள் உங்களைத் தீட்டுக்குள்ளாக்கும். எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டாலும் மாலைவரை தீட்டுள்ளவர்களாவர். எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டு எடுத்தால் அவர்கள் தங்கள் ஆடைகளை துவைக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டாக இருப்பார்கள். “சில மிருகங்களுக்குப் பிளந்த குளம்புகள் இருக்கும். ஆனால் அவை சரியாக இரண்டாக பிளந்திருக்காது. சில மிருகங்கள் அசைபோடாது. சில மிருகங்கள் குளம்புகளால் நடக்காமல் உள்ளங்கால்களால் நடக்கும். இவை அனைத்தும் தீட்டுள்ளவை. அவற்றைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். எவராவது இவற்றின் சடலத்தை எடுத்தால் அவர்கள் தம் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவர்களும் மாலைவரை தீட்டு உள்ளவர்களாக இருப்பார்கள். அம்மிருகங்கள் உங்களுக்கு தீட்டானவை. “பெருச்சாளி, எலி, பெரிய பல்லி வகைகள், உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி ஆகிய ஊர்ந்து செல்லும் பிராணிகள் அனைத்தும் உங்களுக்குத் தீட்டானவை. இவற்றின் செத்த உடலைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். “மேற்சொன்ன தீட்டான மிருகங்கள் செத்து எதன் மேலாவது விழுந்தாலும் அது தீட்டாகும். அவை மரப்பொருள், ஆடை, தோல், துக்க நேரத்திற்குரிய ஆடை, வேலைக்குரிய கருவி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவானாலும் உடனடியாக அதை தண்ணீரால் கழுவ வேண்டும். அது மாலைவரை தீட்டாக இருக்கும். அதன் பிறகே அவை தீட்டு கழிந்து சுத்தமாகும். அவற்றில் ஒன்று மண்பாத்திரத்தில் விழுந்தால், பாத்திரமும் அதில் உள்ள பொருளும் தீட்டாகிவிடும். எனவே அதனை உடைத்துப் போட வேண்டும். தீட்டான மண்பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து உணவுப் பொருட்கள் மேல் படுமேயானால், அவ்வுணவும் தீட்டாகிவிடும். மரித்து தீட்டாகிப் போன மிருகத்தின் உடலானது எதன் மேலாவது விழுமானால், அதுவும் தீட்டாகிப்போகும். அது களிமண்ணாலான அடுப்பாகவோ, அல்லது மண் தொட்டியாகவோ இருக்கலாம், அவற்றை உடைத்துப் போட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டாய் இருக்கட்டும். “நீரூற்றும், தண்ணீருள்ள கிணறும் சுத்தமாக இருக்கும். ஆனால் எவராவது தீட்டான மிருகத்தின் செத்த உடலைத் தொட்டால் அவர்களும் தீட்டாகிவிடுவார்கள். தீட்டான மிருகங்களின் செத்த உடலானது விதைகளின் மேல் விழுந்தால் அவை தீட்டாகாது. ஆனால் தீட்டான மிருகங்களின் செத்த உடலின் பாகங்கள் தண்ணீர் பட்ட விதையின்மேல் பட்டால் அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். “உங்களது உணவுக்கான ஒரு மிருகம் செத்தால், அதன் உடலைத் தொடுகிறவன் மாலைவரை தீட்டாக இருப்பான். அதன் இறைச்சியைத் தின்றவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். அம்மிருகங்களின் செத்த உடலைத் தூக்குகிறவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். இவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
லேவியராகமம் 11:1-40 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்: மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக. தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது. பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், பருந்தும், சகலவித வல்லூறும், சகலவித காகங்களும், தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும், ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும், நாரையும், கூழக்கடாவும், குருகும், கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே. பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே, வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம். பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான். விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான். நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும், உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே. சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும். அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும். புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும். அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும், சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான். மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது. அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.