யூதா 1:17-23

யூதா 1:17-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் அன்பான நண்பரே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் முன்னறிவித்தவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கடைசிக் காலங்களில், “ஏளனம் செய்கிறவர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் இறை பக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படியே நடப்பார்கள் என்றும்” அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே. இந்த ஏளனக்காரர் உங்களைப் பிரிவினைக்கு உள்ளாக்குகிறார்கள். இவர்கள் மனித இயல்பின் உணர்ச்சிகளைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பரிசுத்த ஆவியானவர் குடியிருப்பதில்லை. ஆனால் அன்பானவர்களே, நீங்களோ உங்களது மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரில் ஜெபம் பண்ணுங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள். மற்றவர்களை தண்டனைத் தீர்ப்பின் நெருப்பிலிருந்து இழுத்து எடுத்துக் காப்பாற்றுங்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்; ஆனால், அப்போது எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடைய உடைகளும்கூட மாம்சத்தால் கறைபட்டிருக்கின்றன. எனவே, அவற்றையும் வெறுத்துத் தள்ளிவிடுங்கள்.

யூதா 1:17-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள். கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே. நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து, பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.

யூதா 1:17-23 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்பான நண்பர்களே, முன்னர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கூறியவற்றை நினைவுகூருங்கள். சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர். அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை. ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள். தேவனுடைய அன்பில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணைக்காகக் காத்திருங்கள். பெலவீனமுள்ள மக்களிடம் இரக்கம் கொள்ளுங்கள். நெருப்பிலிருந்து விடுவிப்பதன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள். சிறு எச்சரிக்கையுணர்வோடு இரக்கம் காட்டவேண்டிய சிலர் இருக்கிறார்கள். பாவத்தினால் அழுக்கேறிய அவர்களது ஆடைகளையும் கூட வெறுத்துவிடுங்கள்.

யூதா 1:17-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்