யோசுவா 7:6-9

யோசுவா 7:6-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யோசுவா தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் முகங்குப்புற விழுந்து, அன்று மாலைவரை அங்கேயே கிடந்தான். அவ்வாறே இஸ்ரயேல் சபைத்தலைவர்களும் செய்து தங்கள் தலைகள்மேல் புழுதியைக் கொட்டிக்கொண்டு கிடந்தார்கள். அப்பொழுது யோசுவா, “ஆண்டவராகிய யெகோவாவே, இந்த மக்களை ஏன் யோர்தானைக் கடக்கப்பண்ணி இங்கு கொண்டுவந்தீர்? எங்களை எமோரியர் கையில் ஒப்புக்கொடுத்து அழிப்பதற்காகவோ? நாங்கள் யோர்தானின் மறுகரையில் குடியிருப்பதில் திருப்தியடைந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! யெகோவாவே, இப்பொழுது இஸ்ரயேலர் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களே! நான் இதற்கு என்ன சொல்வேன்? கானானியரும் அந்த நாட்டின் மற்ற மக்களும் இதைக் கேள்விப்படுவார்கள். அவர்கள் எங்களைச் சுற்றிவளைத்துப் பூமியிலிருந்து எங்கள் பெயரை முழுவதும் அழித்துவிடுவார்களே. அப்பொழுது உம்முடைய மகத்தான பெயருக்காக நீர் என்ன செய்வீர்?” என்றான்.

யோசுவா 7:6-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். யோசுவா: ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தான் நதியைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும். ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான்.

யோசுவா 7:6-9 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசுவா இதைக் கேட்டபோது, துயரமுற்றுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து வணங்கினான். மாலைவரைக்கும் அங்கேயே இருந்தான். இஸ்ரவேலரின் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு சாம்பலைத் தலையில் தூவிக்கொண்டனர். யோசுவா, “எனது ஆண்டவராகிய கர்த்தாவே! எங்கள் ஜனங்களை நீர் யோர்தான் நதியைக் கடக்க வைத்தீர். ஏன் எங்களை இத்தனை தூரம் அழைத்து வந்து எமோரியரால் அழிவுற வைக்கிறீர்? நாங்கள் திருப்தியோடு யோர்தானின் அக்கரையில் வாழ்ந்திருக்கலாம்! கர்த்தாவே! எனது உயிரின் மீது ஆணையிடுகிறேன், நான் சொல்லக்கூடியது எதுவுமில்லை. இஸ்ரவேலரைப் பகைவர்கள் சூழ்ந்துள்ளனர். கானானியரும் இந்நாட்டின் எல்லா ஜனங்களும் நடந்ததை அறிவார்கள். அவர்கள் எங்களைத் தாக்கி அழிப்பார்கள்! அப்போது உமது மேலான பெயரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்வீர்” என்றான்.

யோசுவா 7:6-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும். ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். கானானியரும் தேசத்துக் குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரை பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.