யோசுவா 7:21-26

யோசுவா 7:21-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒரு அழகான பாபிலோனிய அங்கியையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் நிறையுள்ள ஒரு தங்கப்பாளத்தையும் கண்டேன். அவற்றின்மேல் நான் பேராசைகொண்டு அவற்றை எடுத்துக்கொண்டேன். அவை என்னுடைய கூடார நிலத்திற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளி அடியில் இருக்கிறது” என்றான். யோசுவா ஏவலாளர்களை அங்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்துக்கு ஓடி அங்கு பார்த்தபோது, அவை அங்கே கூடாரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வெள்ளி அடியில் இருந்தது. அவர்கள் கூடாரத்திற்குள் இருந்து அந்த பொருட்களை எடுத்து யோசுவாவிடத்திலும், எல்லா இஸ்ரயேலர்களிடத்திலும் கொண்டுவந்து, அவைகளை யெகோவாவின் முன்பாகப் பரப்பிவைத்தார்கள். அப்பொழுது யோசுவாவும், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் சேராகின் மகனாகிய ஆகானை ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அவன் எடுத்திருந்த வெள்ளியும், மேலங்கியும், தங்கப்பாளமும் அவனுடன் எடுத்துச்செல்லப்பட்டன. அவனுடைய மகன்களையும், மகள்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும், செம்மறியாடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுபோனார்கள். யோசுவா ஆகானிடம், “நீ எங்கள்மேல் ஏன் இத்தகைய துன்பத்தைக் கொண்டுவந்தாய்? யெகோவா இன்று உன்மேல் துன்பத்தைக் கொண்டுவருவார்” என்றான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஆகானையும் அவன் குடும்பத்தாரையும் கல்லால் எறிந்து கொன்றார்கள். அதன்பின் அவர்களை உடமைகள் எல்லாவற்றுடனும் சேர்த்து எரித்தார்கள். அவர்கள் ஆகான்மேல் ஒரு கற்குவியலை எழுப்பினார்கள். அது இன்றும் அங்கு இருக்கின்றது. அதன்பின் யெகோவா தன் கோபத்தை தணித்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை அது ஆகோர் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

யோசுவா 7:21-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளிச் சேக்கலையும், 550 கிராம் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான். உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின் கீழ் இருந்தது. அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, யெகோவாவுடைய சமூகத்தில் வைத்தார்கள். அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள். அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று யெகோவா உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே யெகோவா தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

யோசுவா 7:21-26 பரிசுத்த பைபிள் (TAERV)

நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான். எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது. அவர்கள் அப்பொருட்களைக் கூடாரத்திற்கு வெளியே எடுத்து வந்து, அவற்றை யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கொண்டு சென்று, கர்த்தருக்கு முன் அவற்றைத் தரையில் போட்டனர். சேராவின் குமாரனாகிய ஆகானை யோசுவாவும், ஜனங்களும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வெள்ளி, மேலாடை, பொன், ஆகானின் குமாரர்கள், குமாரத்திகள், அவனது ஆடு மாடுகள், கழுதைகள் கூடாரம், பிற பொருட்களையும் ஆகோர் பள்ளத்தாக்கில் சேர்ப்பித்தனர். அப்போது யோசுவா, “எங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகளுக்கு நீ காரணமாக இருந்தாய்! இப்போது கர்த்தர் உனக்குத் தொல்லையளிப்பார்!” என்றான். அப்போது ஜனங்கள் ஆகானின் மீதும் அவன் குடும்பத்தினர் மீதும் அவர்கள் மரிக்கும்படி கற்களை வீசினார்கள். பிறகு ஜனங்கள் அவர்களின் உடல்களையும் அவர்களின் பொருட்களையும் எரித்தனர். ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.

யோசுவா 7:21-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என்கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது. அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள். அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூட சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன்பாளத்தையும், அவன் குமாரரையும், குமாரத்திகளையும், அவன் மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.