யோசுவா 6:24-27

யோசுவா 6:24-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்னர் இஸ்ரயேலர்கள் பட்டணம் முழுவதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் எரித்துப்போட்டார்கள். ஆனாலும் வெள்ளியையும், தங்கத்தையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பொருட்களையும் எடுத்து யெகோவாவின் வீட்டிலுள்ள களஞ்சியத்தில் வைத்தார்கள். யோசுவா வேசி ராகாபுடன் அவளது குடும்பத்தையும், அவளுக்குரிய அனைவரையும் தப்பவிட்டான். ஏனெனில் யோசுவா எரிகோவுக்கு அனுப்பிய ஒற்றர்களை அவள் ஒளித்துவைத்திருந்தாள். அவள் இந்நாள்வரை இஸ்ரயேலர் மத்தியில் வாழ்கின்றாள். அவ்வேளையில் யோசுவா ஆணையிட்டுச் சொன்னதாவது: “இந்த எரிகோ பட்டணத்தை மீண்டும் கட்டுவதற்குப் பொறுப்பெடுப்பவன் யெகோவாவுக்கு முன்பாக சாபத்திற்குள்ளாவான். “அவன் தன் முதற்பேறான மகனை இழந்தே, அதன் அஸ்திபாரத்தை இடுவான். தன் கடைசி மகனை இழந்தே, அதன் வாசலை அமைப்பான்.” யெகோவா யோசுவாவுடன் இருந்தார்; அவன் புகழ் நாடு முழுவதும் பரவிற்று.

யோசுவா 6:24-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பட்டணத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மட்டும் யெகோவாவின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள். அந்தக் காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டுவதற்காக எழும்பும் மனிதன் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருப்பான்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கூறினான். இந்தவிதமாகக் யெகோவா யோசுவாவோடு இருந்தார்; அவனுடைய புகழ் தேசமெல்லாம் பரவியது.

யோசுவா 6:24-27 பரிசுத்த பைபிள் (TAERV)

பின் இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தை எரித்தனர். வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு ஆகியவற்றாலான பொருட்களைத் தவிர பிறவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். அப்பொருட்களை மட்டும் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்ந்தனர். ராகாப் என்னும் வேசியையும், அவளது குடும்பத்தாரையும், அவளோடிருந்தவர்களையும் யோசுவா காப்பாற்றினான். யோசுவா எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பியபோது ராகாப் அவர்களுக்கு உதவியதால் யோசுவா அவர்களை வாழவிட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இன்னும் ராகாப் வாழ்கிறாள். அப்போது: “எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும் கர்த்தரால் அழிவைக் காண்பான். இந்த நகரின் அஸ்திபாரத்தை இடுபவன், தன்னுடைய முதலாவதாகப் பிறந்த குமாரனை இழப்பான். நகரவாயிலை அமைப்பவன் தனது கடைசி குமாரனை இழப்பான்” என்ற சாப அறிவிப்பை யோசுவா வெளியிட்டான். கர்த்தர் யோசுவாவோடிருந்தார். நாடு முழுவதும் யோசுவாவின் புகழ் பரவியது.

யோசுவா 6:24-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் மாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள். அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான். இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.