யோசுவா 6:1-5
யோசுவா 6:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எரிகோ பட்டணம் இஸ்ரயேலர்கள் நிமித்தம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் ஒருவரும் பட்டணத்தைவிட்டு வெளியே போகவுமில்லை; உள்ளே வரவுமில்லை. அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “இதோ, எரிகோ பட்டணத்தை அதன் அரசனோடும், போர்வீரர்களோடும் உன்னிடம் கையளித்துவிட்டேன். நீ ஆயுதம் தரித்த மனிதர்களோடு அணிவகுத்துப் பட்டணத்தைச்சுற்றி வா. இவ்வாறு ஆறுநாட்கள் செய். உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஏழு ஆசாரியர்கள் செம்மறியாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளங்களை எடுத்துக்கொண்டு செல்லும்படிசெய். ஏழாம்நாளோ நீங்கள் பட்டணத்தைச்சுற்றி ஏழுமுறை அணிவகுத்துச் செல்லுங்கள். அவ்வேளையில் ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு செல்லட்டும். ஆசாரியர்கள் எக்காளங்களில் நீண்டதொனி எழுப்புவதைக் கேட்டவுடன் எல்லா மக்களையும் உரத்த சத்தம் எழுப்பச்சொல். அப்பொழுது பட்டணத்தின் சுற்றுமதில் இடிந்துவிழும். இஸ்ரயேல் மக்கள் பட்டணத்தினுள் செல்லட்டும். ஒவ்வொரு மனிதனும் தான்நின்ற இடத்திலிருந்து நேராக உள்ளே செல்லட்டும்” என்று கூறினார்.
யோசுவா 6:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. யெகோவா யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும். ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவாருங்கள்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நீண்ட சப்தம் எழுப்பும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், மக்கள் எல்லோரும் மகா சத்தத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும்; அப்பொழுது பட்டணத்தின் மதில் இடிந்துவிழும்; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராக ஏறிப்போகவேண்டும் என்றார்.
யோசுவா 6:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள். நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை. அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “பார், நீ எரிகோ நகரத்தை வீழ்த்தும்படி செய்வேன். நீ அந்நகரத்தின் ராஜாவையும், போர் செய்யும் ஜனங்களையும் தோற்கடிப்பாய். உனது சேனையோடு ஒவ்வொரு நாளும் நகரை ஒரு முறை சுற்றிச் செல். ஆறு நாட்கள் இவ்வாறு செய். வெள்ளாட்டுக் கடாவின் கொம்பால் செய்த எக்காளங்களை ஏழு ஆசாரியர்கள் சுமக்கும்படி சொல். பரிசுத்தப் பெட்டியையும் சுமந்து செல்லுங்கள். ஆசாரியர்களை பரிசுத்தப் பெட்டிக்கு முன் அணிவகுத்துச் செல்லும்படி கூறு. ஏழாம் நாள், ஏழுமுறை அணிவகுத்துச் செல்லும் போது ஆசாரியர்களிடம் எக்காளம் ஊதும்படி கூறு. ஆசாரியர்கள் எக்காளத்தை உரத்த குரலில் ஊதும் சத்தத்தை நீ கேட்டதும், எல்லா ஜனங்களையும் உரத்த சத்தம் எழுப்பச் சொல். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, நகரத்தின் சுவர்கள் இடிந்து விழும். உனது ஜனங்கள் நகரத்திற்குள் நுழைவார்கள்” என்றார்.
யோசுவா 6:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள். ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.