யோசுவா 5:10-15

யோசுவா 5:10-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேல் மக்கள் மாதத்தின் பதினான்காம் நாள் மாலையில், எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபொழுது, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். பஸ்காவுக்கு அடுத்தநாளான அந்த நாளிலே அவர்கள் அந்த நாட்டின் விளைச்சலில் சிலவற்றை உண்டார்கள். அவர்கள் புளிப்பில்லாத அப்பத்தையும், வறுத்த தானியத்தையும் சாப்பிட்டார்கள். அவர்கள் கானான்நாட்டின் உணவைச் சாப்பிட்ட மறுநாளே மன்னா நின்றுவிட்டது. அதன்பின் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னா கிடைக்கவேயில்லை. ஆனால் அந்த வருடத்தில் அவர்கள் கானான்நாட்டின் விளைச்சலைச் சாப்பிட்டார்கள். மேலும் யோசுவா எரிகோ பட்டணத்தைச் சமீபித்தபோது, தன் கையிலே உருவிய வாளுடன் நிற்கும் ஒரு மனிதனைக் கண்டான். யோசுவா அவனருகே சென்று, “நீ எங்களைச் சேர்ந்தவனா அல்லது எங்கள் பகைவரைச் சேர்ந்தவனா?” என்று கேட்டான். அதற்கு அந்த மனிதன், “நான் எவரையுமே சேர்ந்தவனல்ல. ஆனால் யெகோவாவின் படைத்தளபதியாக இப்பொழுது வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தான். யோசுவா, பயபக்தியாய் முகங்குப்புற தரையில் விழுந்து பணிந்து, “என் ஆண்டவர் உமது அடியவனுக்கு சொல்லும்செய்தி என்னவோ?” என்று கேட்டான். அதற்கு யெகோவாவின் படைத்தளபதி, “உன் பாதணிகளைக் கழற்றிவிடு! நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்றான். யோசுவா அவ்வாறே செய்தான்.

யோசுவா 5:10-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் கில்காலில் முகாமிட்டிருந்து, மாதத்தின் பதினான்காம் தேதி மாலைநேரத்திலே எரிகோவின் சமவெளிகளிலே பஸ்காவை அனுசரித்தார்கள். பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் சாப்பிட்டார்கள். அவர்கள் தேசத்தின் தானியத்தைச் சாப்பிட்ட மறுநாளிலே மன்னா பெய்யாமல் நின்றுபோனது; அதுமுதல் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்தின் பலனை அந்த வருடத்திலே சாப்பிட்டார்கள். பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவிய பட்டயம் அவருடைய கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ அல்லது எங்களுடைய சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் யெகோவாவுடைய சேனையின் அதிபதியாக இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தம்முடைய ஊழியனான எனக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது யெகோவாவுடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களில் இருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

யோசுவா 5:10-15 பரிசுத்த பைபிள் (TAERV)

எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாடினர். அப்போது மாதத்தின் பதினான்காவது நாள் மாலையாக இருந்தது. பஸ்காவிற்கு மறு நாள், ஜனங்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டனர். புளிப்பின்றி செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் அவர்கள் சாப்பிட்டனர். மறுநாள், காலையில் வானத்திலிருந்து கிடைத்த விசேஷ உணவு காணப்படவில்லை. கானானில் விளைந்த உணவைச் சாப்பிட்ட நாளில் அது நிகழ்ந்தது. அப்போதிலிருந்து இஸ்ரவேலின் ஜனங்கள் வானத்திலிருந்து விசேஷ உணவைப் பெறவில்லை. யோசுவா எரிகோவை நெருங்கியபோது அண்ணாந்து பார்த்து, அவனுக்கு முன்பாக ஒருவர் நிற்பதைக் கண்டான். அவர் கையில் ஒரு வாள் இருந்தது. யோசுவா அவரிடம் சென்று, “நீர் எங்கள் ஜனங்களின் நண்பரா, அல்லது எங்கள் பகைவரில் ஒருவரா?” என்று கேட்டான். அவர் அதற்கு பதிலாக, “நான் உன் பகைவன் அல்ல. கர்த்தருடைய படையின் சேனாதிபதி நான். நான் உன்னிடம் இப்போதுதான் வந்திருக்கிறேன்” என்றார். உடனே யோசுவா தன் மரியாதையை வெளிப்படுத்துவதற்கு தரையில் விழுந்து வணங்கினான். அவன், “நான் உமது ஊழியன். எனது எஜமானராகிய நீர் ஏதேனும் எனக்குக் கட்டளை வைத்திருக்கிறீரா?” என்று கேட்டான். கர்த்தருடைய படையின் சேனாதிபதி, “உனது பாதரட்சையைக் கழற்று. நீ நிற்குமிடம் பரிசுத்தமானது” என்று கூறினார். யோசுவா அவ்வாறே கீழ்ப்படிந்தான்.

யோசுவா 5:10-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் கில்காலில் பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள். பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள். அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள். பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.