யோசுவா 5:1-12

யோசுவா 5:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோர்தானுக்கு மேற்கிலிருந்த எமோரிய அரசர்கள் எல்லோரும், கடற்கரையோரத்தில் குடியிருந்த கானானிய அரசர்கள் அனைவரும் இஸ்ரயேலர் யோர்தானைக் கடக்கும்வரை, யெகோவா அவர்கள்முன் அதை எவ்வாறு வற்றச்செய்தார் என்பதைக் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் மனச்சோர்வடைந்ததால் தொடர்ந்து இஸ்ரயேலரை எதிர்த்து நிற்கத் தைரியம் அற்றவர்களானார்கள். அவ்வேளையில் யெகோவா யோசுவாவிடம், “கற்களினால் கூர்மையான கத்திகளைச் செய்து இஸ்ரயேலரைத் திரும்பவும் விருத்தசேதனம் செய்” என்றார். அப்பொழுது யோசுவா கற்களினால் கூர்மையான கத்திகளைச் செய்து கிபியத்கார் ஆர்லோத்து என்னும் இடத்தில் இஸ்ரயேலரை விருத்தசேதனம் செய்தான். அவன் இப்படிச் செய்ததற்கான காரணம்: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யுத்தம் செய்யும் வயதையடைந்த எல்லா ஆண்களும் வழியிலே பாலைவனத்தில் இறந்துவிட்டார்கள். எகிப்திலிருந்து வெளிவந்த ஆண்கள் எல்லோரும் விருத்தசேதனம் பெற்றிருந்தார்கள். ஆனால் எகிப்திலிருந்து பயணம் செய்தபோது பாலைவனத்தில் பிறந்தவர்கள் விருத்தசேதனம் பெறாதிருந்தார்கள். இஸ்ரயேல் மக்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமையினால், வனாந்திரத்தில் நாற்பதுவருடம் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் எகிப்தைவிட்டு வெளியேறியபோது யுத்தம் செய்யும் வயதையடைந்தவர்கள் இறக்கும்வரை இப்படி அலைந்து திரிந்தார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தருவதாக அவர்கள் தந்தையருக்கு மனப்பூர்வமாய் வாக்களித்திருந்த பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்கள் காணவேமாட்டார்கள் என யெகோவா ஆணையிட்டிருந்தார். எனவே யெகோவா அவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய மகன்களை எழுப்பினார். இவர்களே யோசுவாவினால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் வழியில் விருத்தசேதனம் செய்யப்படாததினால் இன்னும் விருத்தசேதனம் பெறப்படாதவர்களாய் இருந்தார்கள். இஸ்ரயேலரின் முழு நாடும் விருத்தசேதனம் பெற்றபின், அவர்கள் குணமடையும்வரை அவ்விடத்திலேயே முகாமில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “உங்களுக்கு இருந்த எகிப்தின் நிந்தையை இன்றே நீக்கிவிட்டேன்” என்றார். எனவே அந்த இடம் இன்றுவரை கில்கால் என அழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் மாதத்தின் பதினான்காம் நாள் மாலையில், எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபொழுது, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். பஸ்காவுக்கு அடுத்தநாளான அந்த நாளிலே அவர்கள் அந்த நாட்டின் விளைச்சலில் சிலவற்றை உண்டார்கள். அவர்கள் புளிப்பில்லாத அப்பத்தையும், வறுத்த தானியத்தையும் சாப்பிட்டார்கள். அவர்கள் கானான்நாட்டின் உணவைச் சாப்பிட்ட மறுநாளே மன்னா நின்றுவிட்டது. அதன்பின் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னா கிடைக்கவேயில்லை. ஆனால் அந்த வருடத்தில் அவர்கள் கானான்நாட்டின் விளைச்சலைச் சாப்பிட்டார்கள்.

யோசுவா 5:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் கடந்துபோகும்வரைக்கும், யெகோவா யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததை, யோர்தானுக்கு மேற்குப்பகுதியில் குடியிருந்த எமோரியர்களின் எல்லா ராஜாக்களும், மத்திய தரை சமுத்திரத்தின் அருகே குடியிருந்த கானானியர்களின் எல்லா ராஜாக்களும் கேட்டதுமுதல், அவர்களுடைய இருதயம் கரைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக சோர்ந்துபோனார்கள். அந்தக் காலத்திலே யெகோவா யோசுவாவை நோக்கி: நீ கூர்மையான கத்திகளை உண்டாக்கி, மீண்டும் இரண்டாம்முறை இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய் என்றார். அப்பொழுது யோசுவா கூரான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்செய்தான். யோசுவா இப்படி விருத்தசேதனம்செய்த நோக்கம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஆண்மக்களாகிய யுத்த மனிதர்கள் எல்லோரும் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே இறந்துபோனார்கள். எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே பிறந்த எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள். யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த மனிதர்களான எல்லோரும் இறக்கும்வரைக்கும், இஸ்ரவேல் மக்கள் 40 வருடங்கள் வனாந்திரத்தில் நடந்து திரிந்தார்கள்; யெகோவா எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் செய்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பச்செய்த அவர்களுடைய ஆண் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்செய்தான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம் செய்யாததினால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள். மக்கள் எல்லோரும் விருத்தசேதனம் செய்யப்பட்டபின்பு, அவர்கள் குணமாகும்வரைக்கும் தங்கள்தங்கள் இடத்திலே முகாமில் தங்கியிருந்தார்கள். யெகோவா யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இல்லாதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த இடம் இந்த நாள்வரைக்கும் கில்கால் எனப்படுகிறது. இஸ்ரவேல் மக்கள் கில்காலில் முகாமிட்டிருந்து, மாதத்தின் பதினான்காம் தேதி மாலைநேரத்திலே எரிகோவின் சமவெளிகளிலே பஸ்காவை அனுசரித்தார்கள். பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் சாப்பிட்டார்கள். அவர்கள் தேசத்தின் தானியத்தைச் சாப்பிட்ட மறுநாளிலே மன்னா பெய்யாமல் நின்றுபோனது; அதுமுதல் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்தின் பலனை அந்த வருடத்திலே சாப்பிட்டார்கள்.

யோசுவா 5:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் ஜனங்கள் கடந்துபோகும் மட்டும் கர்த்தர் யோர்தான் நதியை உலர்ந்து போகச் செய்தார். யோர்தான் நதிக்குக் கிழக்கிலிருந்து மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழி முழுவதும் வாழ்ந்த எமோரியரின் ராஜாக்களும், மத்தியதரைக் கடலின் கரையில் வாழ்ந்த கானானிய ராஜாக்களும் இதைக் கேள்விப்பட்டு மிகவும் பயந்தார்கள். அதற்குப்பின் அவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து நின்று போர் செய்வதற்குத் துணியவில்லை. அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நெருப்பை உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்து இஸ்ரவேலின் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்” என்றார். எனவே யோசுவா நெருப்பு உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்தான். பின் அவன் இஸ்ரவேல் ஜனங்களை கிபியாத் ஆர்லோத் என்னுமிடத்தில் விருத்தசேதனம் செய்தான். அவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்த காரணம் இதுதான்: இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு, படையில் பங்குவகிக்கக்கூடிய ஆண்கள் எல்லோருக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. பாலைவனத்திலிருந்தபோது, போர் செய்யும் ஆண்களில் பலர் கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே கர்த்தர் அந்த ஜனங்கள், “நன்றாக விளைகிற தேசத்தைக் காணமாட்டார்கள்” என்று உறுதியாகக் கூறினார். கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாக உறுதி கூறியும், அம்மனிதர்களினிமித்தம், தேவன் ஜனங்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அவர்கள் மரிக்கும்வரை அலையச் செய்தார். போர் செய்யும் அந்த ஆண்கள் மரித்தனர், அவர்கள் குமாரர்கள் போரிடும் ஸ்தானத்தை ஏற்றார்கள். ஆனால் பாலைவனத்தில் பிறந்த சிறுவர் எவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே யோசுவா அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தான். யோசுவா எல்லா மனிதருக்கும் விருத்தசேதனம் செய்து முடித்தான். அவர்கள் குணமடையும்வரைக்கும் அங்கேயே முகாமிட்டிருந்தார்கள். அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நீங்கள் அனைவரும் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். அது உங்களை வெட்கமடையச் செய்தது. ஆனால் இன்று நான் அவ்வெட்கத்தைப் போக்கிவிட்டேன்” என்றார். எனவே யோசுவா அவ்விடத்திற்குக் “கில்கால்” எனப் பெயரிட்டான். இன்றளவும் அந்த இடம் “கில்கால்” என்றே அழைக்கப்படுகிறது. எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாடினர். அப்போது மாதத்தின் பதினான்காவது நாள் மாலையாக இருந்தது. பஸ்காவிற்கு மறு நாள், ஜனங்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டனர். புளிப்பின்றி செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் அவர்கள் சாப்பிட்டனர். மறுநாள், காலையில் வானத்திலிருந்து கிடைத்த விசேஷ உணவு காணப்படவில்லை. கானானில் விளைந்த உணவைச் சாப்பிட்ட நாளில் அது நிகழ்ந்தது. அப்போதிலிருந்து இஸ்ரவேலின் ஜனங்கள் வானத்திலிருந்து விசேஷ உணவைப் பெறவில்லை.

யோசுவா 5:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள். அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான். யோசுவா இப்படி விருத்தசேதனம்பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்த புருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள். எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தார்கள். கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள். ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள்தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது. இஸ்ரவேல் புத்திரர் கில்காலில் பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள். பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள். அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.