யோசுவா 24:14-18

யோசுவா 24:14-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான். அதற்கு மக்கள் மறுமொழியாக, “யெகோவாவைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்வது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. எங்கள் இறைவனாகிய யெகோவா தாமே, எங்களையும் எங்கள் முன்னோர்களையும் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அங்கு எங்கள் கண்களுக்கு முன்பாகப் பெரிய அற்புதச் செயல்களை நடப்பித்தார். எங்கள் பயணம் முழுவதிலும், நாங்கள் பிரயாணம் செய்த இடங்களிலும் உள்ள பிறநாடுகளின் மத்தியிலுமிருந்து நம்மைப் பாதுகாத்தார். அத்துடன் யெகோவா எமோரியர் உட்பட அந்நாட்டின் எல்லா மக்களையும் எங்கள் முன்பாகத் துரத்திவிட்டார். ஆகையால் நாங்களும் யெகோவாவுக்கே பணிசெய்வோம். ஏனெனில் அவரே எங்கள் இறைவன்” என்றார்கள்.

யோசுவா 24:14-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள். யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான். அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, யெகோவாவை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக. நம்மையும் நம்முடைய முற்பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய யெகோவா தானே. தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் யெகோவா நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் யெகோவாவைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.

யோசுவா 24:14-18 பரிசுத்த பைபிள் (TAERV)

பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள். “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான். அப்போது ஜனங்கள் பதிலாக, “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தமாட்டோம். அந்நிய தெய்வங்களுக்கு ஒருபோதும் சேவை செய்யமாட்டோம்! தேவனாகிய கர்த்தர் தான் எகிப்திலிருந்து வெளியேற்றி நம் ஜனங்களை அழைத்து வந்தார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தேசத்தில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் அங்கு பெரிய காரியங்களை கர்த்தர் எங்களுக்காகச் செய்தார். அவர் எங்களை அத்தேசத்திலிருந்து அழைத்து வந்து, பிற தேசங்கள் வழியாக நாங்கள் பிரயாணம் செய்யும்போது எங்களைப் பாதுகாத்து வந்தார். அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள்.

யோசுவா 24:14-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே. தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.

யோசுவா 24:14-18

யோசுவா 24:14-18 TAOVBSIயோசுவா 24:14-18 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்