யோசுவா 24:13-33
யோசுவா 24:13-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’ “இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான். அதற்கு மக்கள் மறுமொழியாக, “யெகோவாவைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்வது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. எங்கள் இறைவனாகிய யெகோவா தாமே, எங்களையும் எங்கள் முன்னோர்களையும் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அங்கு எங்கள் கண்களுக்கு முன்பாகப் பெரிய அற்புதச் செயல்களை நடப்பித்தார். எங்கள் பயணம் முழுவதிலும், நாங்கள் பிரயாணம் செய்த இடங்களிலும் உள்ள பிறநாடுகளின் மத்தியிலுமிருந்து நம்மைப் பாதுகாத்தார். அத்துடன் யெகோவா எமோரியர் உட்பட அந்நாட்டின் எல்லா மக்களையும் எங்கள் முன்பாகத் துரத்திவிட்டார். ஆகையால் நாங்களும் யெகோவாவுக்கே பணிசெய்வோம். ஏனெனில் அவரே எங்கள் இறைவன்” என்றார்கள். அதற்கு யோசுவா மக்களிடம், “நீங்கள் உங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்ய இயலாதிருக்கிறீர்கள். அவர் பரிசுத்தமான இறைவன். அவர் வைராக்கியமுள்ள இறைவன். நீங்கள் அவருக்கு எதிராக செய்யும் கலகத்தையும், பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார். அவர் உங்களுக்கு நல்லவராயிருந்த பின்பும், நீங்கள் யெகோவாவைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தால், அவரும் உங்களைவிட்டு விலகிச்சென்று, உங்கள்மேல் பெருந்துன்பத்தை வரப்பண்ணி உங்களை முடிவுறப் பண்ணுவார்” என்றான். அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “இல்லை! நாங்கள் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்றார்கள். அதற்கு யோசுவா, “நீங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்வதைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள்” என்றான். அதற்கு மக்களும், “ஆம், நாங்களே சாட்சிகள்,” என்றார்கள். “அப்படியானால், இப்பொழுதே உங்கள் மத்தியிலுள்ள அந்நிய தெய்வங்களை எறிந்துவிட்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் உள்ளங்களை ஒப்புக்கொடுங்கள்” என்று யோசுவா சொன்னான். அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்து அவருக்குக் கீழ்படிவோம்” என்றார்கள். அந்நாளில் யோசுவா சீகேமிலே மக்களுக்காக ஒரு உடன்படிக்கையைச் செய்து அவர்களுக்குச் சட்டங்களையும், விதிமுறைகளையும் ஏற்படுத்தினான். இவற்றை யோசுவா இறைவனின் சட்ட புத்தகத்தில் எழுதிவைத்தான். பின்பு யெகோவாவின் பரிசுத்த இடத்திற்கு அருகேயுள்ள கருவாலி மரத்தின்கீழ் ஒரு பெரிய கல்லை நிறுத்தினான். அப்பொழுது அவன் எல்லா மக்களிடமும் கூறியதாவது: “இதோ பாருங்கள்; இந்தக் கல் நமக்கெதிரான சாட்சியாயிருக்கும். யெகோவா நமக்கு கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் இறைவனுக்கு உண்மையாயிராவிட்டால், இக்கல்லே உங்களுக்கு எதிரான ஒரு சாட்சியாக இருக்கும்” என்றான். அதன்பின் யோசுவா இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் சொத்துரிமை இடங்களுக்குப் போவதற்கு அனுப்பிவைத்தான். இவைகளுக்குப்பின் யெகோவாவின் பணியாளன், நூனின் மகனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது வயதில் இறந்தான். அவர்கள் காயாஸ் மலைக்கு வடக்கேயுள்ள எப்பிராயீமின் மலைநாட்டில் யோசுவாவுக்கு உரிமைச்சொத்தாகக் கிடைத்த, திம்னாத் சேராக் என்னும் இடத்தில் அவனை அடக்கம் செய்தார்கள். யோசுவாவின் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலர்கள் யெகோவாவுக்குப் பணிசெய்தார்கள். அவனுக்குப்பின் யெகோவா இஸ்ரயேலருக்குச் செய்த அனைத்தையும் அனுபவத்தில் கண்ட சபைத்தலைவர்களுடைய வாழ்நாள் முழுவதிலும்கூட இஸ்ரயேலர் யெகோவாவுக்கே பணிசெய்தார்கள். எகிப்தில் இருந்து இஸ்ரயேலர் கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகள் சீகேமில் அடக்கம் செய்யப்பட்டன. அந்த நிலத்துண்டை ஏமோரின் மகன்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுகளுக்கு யாக்கோபு வாங்கியிருந்தான். இந்த ஏமோர் சீகேமின் தகப்பன். இந்த நிலத்துண்டு யோசேப்பின் சந்ததிகளின் உரிமைச் சொத்தாகும். ஆரோனின் மகனாகிய எலெயாசார் இறந்தபோது, கிபியா என்னும் இடத்தில் அவன் அடக்கம் செய்யப்பட்டான். எப்பிராயீமின் மலைநாட்டில் இருக்கும் இந்த நிலம் பினெகாசின் மகனுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.
யோசுவா 24:13-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார். ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள். யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான். அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, யெகோவாவை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக. நம்மையும் நம்முடைய முற்பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய யெகோவா தானே. தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் யெகோவா நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் யெகோவாவைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள். யோசுவா மக்களை நோக்கி: நீங்கள் யெகோவாவைத் தொழுதுகொள்ளமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னிக்கமாட்டார். யெகோவா உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் யெகோவாவை விட்டு, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை அழிப்பார் என்றான். மக்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றார்கள். அப்பொழுது யோசுவா மக்களை நோக்கி: யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்களுடைய நடுவே இருக்கிற அந்நிய தெய்வங்களை அகற்றிவிட்டு, உங்களுடைய இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு நேராகத் திருப்புங்கள் என்றான். அப்பொழுது மக்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவாவையே தொழுதுகொண்டு, அவருடைய சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். அந்தப்படி யோசுவா அந்த நாளில் சீகேமிலே மக்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களுக்கு அதைப் பிரமாணமாகவும் கட்டளையாகவும் ஏற்படுத்தினான். இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே யெகோவாவுடைய பரிசுத்த இடத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழே நட்டு, எல்லா மக்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாக இருப்பதாக; யெகோவா நம்மோடு சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்களுடைய தேவனுக்கு எதிராகப் பொய்சொல்லாதபடி, இது உங்களுக்குச் சாட்சியாக இருப்பதாக என்று சொல்லி. யோசுவா மக்களை அவரவர்களுடைய சொந்தமான தேசத்திற்கு அனுப்பிவிட்டான். இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் யெகோவாவுடைய ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக மரணமடைந்தான். அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய பங்கின் எல்லைக்குள்ளே அடக்கம் செய்தார்கள். யோசுவா உயிரோடு இருந்த எல்லா நாட்களிலும், யெகோவா இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய செயல்கள் அனைத்தையும் அறிந்து யோசுவாவிற்குப்பின்பு அநேகநாட்கள் உயிரோடு இருந்த மூப்பர்களுடைய எல்லா நாட்களிலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவைச் சேவித்தார்கள். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியர்களுடைய மகன்களின் கையில் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கின நிலத்தின் பங்கிலே அடக்கம்செய்தார்கள்; அந்த நிலம் யோசேப்பின் சந்ததியினர்களுக்குச் சொந்தமானது. ஆரோனின் மகனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவனுடைய மகனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்செய்தார்கள்.
யோசுவா 24:13-33 பரிசுத்த பைபிள் (TAERV)
‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’” பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள். “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான். அப்போது ஜனங்கள் பதிலாக, “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தமாட்டோம். அந்நிய தெய்வங்களுக்கு ஒருபோதும் சேவை செய்யமாட்டோம்! தேவனாகிய கர்த்தர் தான் எகிப்திலிருந்து வெளியேற்றி நம் ஜனங்களை அழைத்து வந்தார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தேசத்தில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் அங்கு பெரிய காரியங்களை கர்த்தர் எங்களுக்காகச் செய்தார். அவர் எங்களை அத்தேசத்திலிருந்து அழைத்து வந்து, பிற தேசங்கள் வழியாக நாங்கள் பிரயாணம் செய்யும்போது எங்களைப் பாதுகாத்து வந்தார். அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள். அப்போது யோசுவா, “அது உண்மையல்ல. நீங்கள் கர்த்தருக்குத் தொடர்ந்து சேவை செய்வதென்பது இயலாதது. தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அந்நிய தெய்வங்களை ஆராதிக்கும் ஜனங்களை தேவன் வெறுக்கிறார். தனக்கெதிராக அவ்வாறு திரும்பினால் உங்களை தேவன் மன்னிக்கமாட்டார். ஆனால் நீங்கள் கர்த்தரை விட்டு நீங்கிப் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்வீர்கள். உங்களுக்குக் கொடிய காரியங்கள் நிகழும்படி கர்த்தர் செய்வார். கர்த்தர் உங்களை அழிப்பார். தேவனாகிய கர்த்தர் உங்களிடம் நல்லவராக இருந்தார், ஆனால் நீங்கள் அவருக்கெதிராக திரும்பினால் அவர் உங்களை அழிப்பார்” என்றான். அதற்கு ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “இல்லை! நாங்கள் கர்த்தருக்கே சேவை செய்வோம்” என்றார்கள். அப்போது யோசுவா, “உங்களையும், உங்களோடிருக்கிற ஜனங்களையும் சுற்றி நோக்குங்கள். நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளா?” என்றான். ஜனங்கள் பதிலாக, “ஆம், அது உண்மை! நாங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்துள்ளோம் என்பதைக் காண்கிறோம்” என்றார்கள். அப்போது யோசுவா, “உங்களிடமிருக்கிற பொய்த் தெய்வங்களை எடுத்து வீசிவிடுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழுமனதோடும் நேசியுங்கள்” என்றான். பின் ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்வோம். நாங்கள் அவருக்குக் கீழ்ப்படிவோம்” என்றார்கள். அந்த நாளில் யோசுவா ஜனங்களுக்காக ஒரு ஒப்பந்தத்தைச் செய்தான். சீகேம் எனப்பட்ட ஊரில் இந்த ஒப்பந்தத்தைச் செய்தான். அது அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாயிற்று. தேவனுடைய சட்ட புத்தகத்தில் யோசுவா இவற்றை எழுதினான். பின் யோசுவா ஒரு பெரிய கல்லை எடுத்தான். அக்கல்லே அந்த ஒப்பந்தத்திற்கு அடையாளமாயிற்று. கர்த்தருடைய பரிசுத்த கூடாரத்தின் அருகே இருந்த கர்வாலி மரத்திற்கு அடியில் அவன் அக்கல்லை வைத்தான். பிறகு யோசுவா அனைவரையும் நோக்கி, “நாம் இன்று கூறிய காரியங்களை நினைவு கூருவதற்கு இந்தக் கல் உதவும். கர்த்தர் நம்மோடு பேசிக் கொண்டிருந்த இந்த நாளில், இந்த கல் இங்கு இருந்தது. இன்று நடந்தவற்றை நினைவுகூருவதற்கு உதவும் ஒன்றாக இந்த கல் இருக்கும். உங்களுக்கு எதிரான சாட்சியாகவும் இந்த கல் அமையும். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் திரும்புவதை அது தடுக்கும்” என்றான். பின்பு யோசுவா அனைவரிடமும் தம் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு கூறினான். எனவே ஒவ்வொருவனும் அவனவன் இருப்பிடத்திற்குச் சென்றான். அதன் பின்னர் நூனின் குமாரனாகிய யோசுவா மரித்தான். யோசுவாவுக்கு அப்போது 110 வயது. திம்னாத் சேராவிலுள்ள அவனது சொந்த நிலத்தில் அவன் அடக்கம் பண்ணப்பட்டான். காயாஸ் மலைக்கு வடக்கேயுள்ள எப்பிராயீமின் மலைநாட்டில் அது இருந்தது. யோசுவா உயிரோடிருந்தபோது இஸ்ரவேலர் கர்த்தருக்கு சேவை செய்தனர். யோசுவா மரித்த பின்னரும், கர்த்தருக்குத் தொடர்ந்து, ஜனங்கள் சேவை செய்து வந்தார்கள். அவர்கள் தலைவர்கள் உயிரோடிருந்தபோது ஜனங்கள் தொடர்ந்து கர்த்தரை சேவித்தனர். கர்த்தர் இஸ்ரவேலருக்குச் செய்த காரியங்களைப் பார்த்தவர்கள் இத்தலைவர்கள் ஆவர். இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது, அவர்கள் யோசேப்பின் எலும்புகளை எடுத்து வந்தனர். சீகேமில் யோசேப்பின் எலும்புகளைப் புதைத்தனர். சீகேம் என்ற மனிதனின் தந்தையாகிய எமோரியரின் குமாரர்களிடமிருந்து யாக்கோபு வாங்கிய நிலத்தில் அந்த எலும்புகளைப் புதைத்தனர். யாக்கோபு அந்த நிலத்தை 100 சுத்த வெள்ளி பணத்திற்கு வாங்கியிருந்தான். அந்நிலம் யோசேப்பின் பிள்ளைகளுக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆரோனின் குமாரன், எலெயாசாரும் மரித்தான். எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள கிபியாவில் அவன் அடக்கம்பண்ணப்பட்டான். எலெயாசாரின் குமாரன் பினெகாசுக்குக் கிபியா கொடுக்கப்பட்டது.
யோசுவா 24:13-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார். ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே. தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள். யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார். கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான். ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள். அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான். இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி, எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி, யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான். இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். அவனை எப்பிராயீமின் மலைதேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள். யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று. ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைதேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.