யோசுவா 18:1-10
யோசுவா 18:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின் இஸ்ரயேல் மக்கள் சீலோ என்னும் இடத்தில் ஒன்றுகூடி அங்கே சபைக் கூடாரத்தை அமைத்தார்கள். அந்த நாடு அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது, ஆனால் இஸ்ரயேலில் இன்னும் ஏழு கோத்திரங்கள் தங்கள் சொத்துரிமையைப் பெறாமல் இருந்தன. எனவே யோசுவா இஸ்ரயேலரிடம் கூறியதாவது: “உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு அளித்துள்ள நாட்டை, உங்கள் கைவசமாக்குவதற்கு இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாமதிப்பீர்கள்? ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் மூன்றுபேரை நியமியுங்கள். நான் அவர்களை நாட்டைச் சுற்றிப்பார்த்து மதிப்பீடு செய்ய அனுப்புவேன். அவர்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் கொடுக்கப்படவேண்டிய சொத்துரிமை அளவுப்படி அதை விவரமாய் எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பி வரவேண்டும். நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாகப் பிரிக்கவேண்டும். யூதா கோத்திரம் தென்பகுதியிலும், யோசேப்பின் குடும்பம் வடபகுதியிலும் தொடர்ந்து குடியிருக்கட்டும். நாட்டின் ஏழு பிரிவுகளின் விவரங்களையும் எழுதியபின் என்னிடம் கொண்டுவாருங்கள். நான் நமது இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகச் சீட்டுப்போட்டு, உங்கள் பங்கைக் குறிப்பிடுவேன். லேவி கோத்திரத்தார் உங்கள் நாட்டில் உங்கள் மத்தியில் பங்கைப் பெறுவதில்லை. ஏனெனில் யெகோவாவுக்கு ஆசாரியர்களாகப் பணிசெய்வதே அவர்கள் பங்கு. காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஏற்கனவே யோர்தானின் கிழக்குப் பகுதியில் தங்கள் சொத்துரிமையைப் பெற்றிருந்தார்கள். அதை யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்திருந்தான்.” நாட்டை அளந்து பார்த்துப் பங்கிட அவர்கள் புறப்பட்டபோது யோசுவா அவர்களிடம், “நாட்டைச் சுற்றிப்பார்த்து அதன் விவரத்தை எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பிவாருங்கள். நான் சீலோவிலே யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்காக சீட்டுப்போடுவேன்” என்று அறிவுறுத்தினான். உடனே அவர்கள் புறப்பட்டு நாட்டின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் நாட்டின் விவரங்களைப் பட்டணம் பட்டணமாக ஏழு பகுதிகளாகப் பிரித்து, ஒரு புத்தகச்சுருளில் எழுதி சீலோவில் கூடாரத்தில் இருந்த யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள். அப்பொழுது யோசுவா, சீலோவில் யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்கு சீட்டுப்போட்டு, இஸ்ரயேலரின் கோத்திரப் பிரிவுகளின்படி அவர்களுக்குரிய நிலத்தை பிரித்துக்கொடுத்தான்.
யோசுவா 18:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேல் மக்களின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தார்கள். தேசம் அவர்களின் வசமானது. இஸ்ரவேல் மக்களில் தங்களுடைய பங்குகளை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தன. ஆகவே யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு, நீங்கள் எதுவரைக்கும் அசதியாக இருப்பீர்கள். கோத்திரத்திற்கு மும்மூன்று மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் பங்குகளுக்குத்தக்கதாக விபரமாக எழுதி, என்னிடம் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன். அதை ஏழு பங்குகளாகப் பங்கிடுவார்கள்; யூதா வம்சத்தார்கள் தெற்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார்கள் வடக்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும் நிலைத்திருக்கட்டும். நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாக விவரித்து எழுதி, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இந்த இடத்திலே நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன். லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; யெகோவாவுடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான். அப்பொழுது அந்த மனிதர்கள் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விபரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விபரத்தை எழுதி, என்னிடம் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே யெகோவாவுடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான். அந்த மனிதர்கள் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்குகளாக ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற முகாமிலே யோசுவாவிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே யெகோவாவுடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் மக்களின் பங்குவீதப்படி அவர்களுக்கு தேசத்தைப் பங்கிட்டான்.
யோசுவா 18:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
சீலோவில் இஸ்ரவேலர் எல்லோரும் ஒன்றாகக் கூடினார்கள், அங்கு ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவினர். இஸ்ரவேலர் தேசத்தில் ஆட்சி செலுத்தினர். அத்தேசத்தின் பகைவர்களை எல்லாம் அவர்கள் வென்றனர். அப்போது இஸ்ரவேலின் ஏழு கோத்திரங்கள் இன்னும் தேவன் வாக்களித்த தங்களுக்குரிய நிலத்தின் பாகத்தைப் பெறாமலிருந்தனர். எனவே யோசுவா இஸ்ரவேலரை நோக்கி, “நீங்கள் உங்கள் நிலங்களைப் பெற ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? உங்கள் பிதாக்களின், தேவனாகிய கர்த்தர், இத்தேசத்தை உங்களுக்குத் தந்தார். எனவே உங்களில் ஒவ்வொரு கோத்திரத்தினரும் மும்மூன்று ஆட்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தேசத்தைப் பற்றித் தெரிந்து வருவதற்கு நான் அவர்களை அனுப்புவேன் அவர்கள் திரும்பி வந்து என்னிடம் அந்த தேசத்தை பற்றி விவரிப்பார்கள். அவர்கள் தேசத்தை ஏழு பாகங்களாகப் பிரிப்பார்கள். யூதாவின் ஜனங்களுக்குத் தெற்கிலுள்ள தேசம் உரியதாகும். யோசேப்பின் ஜனங்கள் வடக்கிலுள்ள தேசத்தை வைத்துக்கொள்வார்கள். ஆனால் நீங்கள் தேசப்படத்தை வரைந்து அதை ஏழாகப் பிரிக்க வேண்டும். அப்படத்தை என்னிடம் கொண்டு வாருங்கள். எந்தெந்த கோத்திரத்தாருக்கு, எந்தெந்த பகுதி என்பதை நமது தேவனாகிய கர்த்தர் தீர்மானிப்பதற்கு விட்டுவிடுவோம். லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் தேசத்தைப் பார்க்கவும், பின்னர் அதைப் படமாக வரைந்து யோசுவாவிடம் கொண்டுவரவும் திட்டமிட்டனர். யோசுவா அவர்களை நோக்கி, “போய் தேசத்தை ஆராய்ந்து, அதன் படங்களை வரையுங்கள். பிறகு சீலோவில் என்னிடம் வாருங்கள். பின் சீட்டுப் போட்டு, கர்த்தர் உங்களுக்கான பாகத்தைத் தேர்ந் தெடுக்கும்படியாகச் செய்வேன்” என்றான். எனவே அந்த ஆட்கள் தேசத்திற்குள் சென்றார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றி ஆராய்ந்து, படங்கள் தயாரித்தனர். அவர்கள் அந்தத் தேசத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தனர். அவர்கள் படங்களை வரைந்த பின்னர் சீலோவிற்கு யோசுவாவிடம் திரும்பிச் சென்றனர். சீலோவில் கர்த்தருடைய முன்னிலையில் யோசுவா சீட்டுகளைக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறு, யோசுவா தேசத்தைப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் அவரவருக்குரிய பாகத்தைக் கொடுத்தான்.
யோசுவா 18:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று. இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது. ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள். கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்திற்குத்தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன். அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும். நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன். லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான். அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான். அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள். அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.