யோசுவா 15:1-12

யோசுவா 15:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வம்சம் வம்சமாக யூதா கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட பங்கு தென்பகுதியில் ஏதோம் நாட்டிற்கும், சீன் பாலைவனத்திற்கும் பரந்திருந்தது. அதன் தென் எல்லை உப்புக்கடலில் தென் மூலையிலுள்ள முனையிலிருந்து, அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது. பின்பு அஸ்மோன் பக்கமாகச்சென்று, எகிப்தின் நதியுடன் இணைந்து மத்திய தரைக்கடலில் முடிந்தது. இதுவே யூதா கோத்திரத்தாரின் தென் எல்லை. யோர்தான் நதியின் ஆரம்பம் வரை உள்ள உப்புக்கடல் அதன் கிழக்கு எல்லையாகும். வட எல்லை யோர்தான் முகத்துவாரத்திலுள்ள கடலின் முனையிலிருந்து ஆரம்பமாகி, அங்கிருந்து பெத் ஓக்லாவுக்குச் சென்று பின் பெத் அரபாவின் வடக்காகக் கடந்து ரூபனின் மகனாகிய போகனின் கல் இருந்த இடம்வரை சென்றது. அந்த எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குச் சென்றது. வடக்கே திரும்பி கணவாய்க்குத் தெற்கிலுள்ள அதும்மீமின் மேட்டுக்கு எதிரேயுள்ள கில்காலுக்குச் சென்றது. அங்கிருந்து எல்லையானது என்சேமேசின் நீரூற்றுகளுக்குச் சென்று என்ரொகேல் நீரூற்றுவரை வந்தது. பின் எல்லையானது பென் இன்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் பட்டணத்தின் தென்மலைச்சரிவை அதாவது எருசலேமை அடைந்தது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்கிற்கு மேற்கே மலையின் உச்சிக்கு ஏறியது. இந்த மலை ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடக்குமுனையில் இருந்தது. அந்த மலையுச்சியிலிருந்து எல்லையானது, நெப்தோ நீரூற்றை நோக்கிச்சென்று, பின்னர் எப்ரோன் மலையிலுள்ள நகரங்களின் வழியாகச் சென்று அங்கிருந்த கீரியாத்யாரீமாகிய பாலாவை நோக்கிசென்றது. பாலாவிலிருந்து எல்லையானது, மேற்கே வளைந்து சேயீர் மலையை நோக்கித் திரும்பி யெயாரீம் மலையில் வடக்குசரிவு அதாவது கெசலோக் ஒரமாகத் தொடர்ந்துசென்றது. அங்கிருந்து பெத்ஷிமேஷைக் கடந்து திம்னாவரை சென்றது. அது எக்ரோனின் வடக்கு மலைச்சரிவை நோக்கிச்சென்று, சிக்ரோனை நோக்கி திரும்பிச்சென்று, பாலா மலையைக்கடந்து யாப்னியேலை அடைந்தது. அதன் எல்லை மத்திய தரைக்கடலில் முடிந்தது. தேசத்தின் மேற்கு எல்லை, மத்திய தரைக்கடலின் கரையோரமாகும்.

யோசுவா 15:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை. தென்பகுதியான அவர்களுடைய எல்லை சவக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி, தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய், அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, மத்திய தரைக் கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான். கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற சவக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி, பெத்ஓக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத் அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய், பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், என்ரோகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று, பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய், அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய், பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய், 1 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக் கடலிலே முடியும். மேற்கு எல்லை, பெரிய மத்திய தரைக் கடலே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.

யோசுவா 15:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் அந்தக் கோத்திரத்திலிருந்த குடும்பங்களுக்கிடையில் பங்கிடப்பட்டது. அந்த நிலம் ஏதோம் எல்லையிலிருந்து தெற்காக தேமான் விளிம்பில் சீன் பாலைவனம் வரைக்கும் சென்றது. யூதாவின் தெற்கு எல்லை சவக்கடலின் தெற்குக்கோடியில் துவங்கியது. அந்த எல்லை தேள்கணவாயின் தெற்காக சீன் மலைப்பகுதி வரை தொடர்ந்தது. காதேஸ் பர்னேயாவிற்குத் தெற்காகத் தொடர்ந்தது. எஸ்ரோனிலிருந்து ஆதாரையும் அந்த எல்லை கடந்து சென்றது. ஆதாரிலிருந்து அந்த எல்லை கர்க்காவிற்கு தொடர்ந்தது. அந்த எல்லையானது அஸ்மோன், எகிப்தின் ஆறு, பின் மத்தியதரைக் கடல் எனத் தொடர்ந்தது. இதுவே அவர்களின் தெற்கு எல்லையாயிருந்தது. அத்தேசத்தின் கிழக்கு எல்லை சவக்கடலின் தென்கரையிலிருந்து யோர்தான் நதி கடலோடு சேரும் பகுதிவரைக்கும் இருந்தது. வடக்கு எல்லையானது யோர்தான் நதி சவக்கடலோடு கலந்த பகுதியில் அமைந்தது. பின் அது பெத்எக்லா வரைக்கும் சென்று, பெத் அரபாவின் வடக்கே தொடர்ந்தது. போகனின் கல்வரைக்கும் அந்த எல்லை நீண்டது. (ரூபனின் குமாரன் போகன்) வடக்கு எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குத் தொடர்ந்தது. பின் வடக்கே திரும்பி கில்காலுக்குச் சென்றது. அதும்மீமின் மலைவழியாகச் செல்லும் பாதையின் குறுக்கே அந்த எல்லை இருந்தது. அது நதியின் தெற்குப் பகுதியாகும். என்சேமேசின் தண்ணீரின் வழியாகத் தொடர்ந்தது. இந்த எல்லை என்ரொகேலில் முடிந்தது. எபூசியர் நகரின் தெற்குப் பகுதிக்குப் பக்கத்திலுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு வழியாக அவ்வெல்லை சென்றது. (அந்த எபூசிய நகரமே எருசலேம் எனப்பட்டது.) அவ்விடத்தில் எல்லை இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கேயுள்ள மலையுச்சிவரைக்கும் சென்றது. ரெப்பாயீம் பள்ளத் தாக்கின் வடக்கு மூலை வரைக்கும் அது இருந்தது. அந்த இடத்திலிருந்த நெப்தோவாவின் நீரூற்று வரைக்கும் எல்லை தொடர்ந்து எப்பெரோன் மலைக்கருகேயுள்ள நகரங்களுக்குச் சென்றது. அங்கு எல்லை திரும்பி, பாலாவரைக்கும் போனது. (பாலா, கீரியாத் யெயாரீம் என்றும் அழைக்கப்படுகிறது.) பாலாவில் எல்லை மேற்கே திரும்பி சேயீரின் மலை நாட்டிற்குச் சென்றது. யெயாரீம் மலையின் (கெசலோனின்) வடக்குப் பகுதிக்கு அது தொடர்ந்து பெத்ஷிமேசுக்குத் தொடர்ந்தது. அங்கிருந்து எல்லை திம்னாவைக் கடந்தது. பிறகு எக்ரோனுக்கு வடக்கேயுள்ள மலையை எல்லை எட்டியது. அங்கிருந்து சிக்ரோனுக்குத் திரும்பி, பாலா மலையைத் தாண்டியது. பிறகு யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. யூதாவுக்குரிய தேசத்தின் மேற்கெல்லையாக மத்தியதரைக் கடல் இருந்தது. இந்த நான்கு எல்லைகளுக்கும் மத்தியில் யூதாவின் தேசம் இருந்தது. யூதாவின் குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.

யோசுவா 15:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை. தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி, தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய், அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல் மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான். கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனைதுவக்கி, பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய், அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று, அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய், அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய், பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய், அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும். மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.