யோசுவா 14:1-15

யோசுவா 14:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கானான் நாட்டில் இஸ்ரயேலர் சொத்துரிமையாகப் பெற்றுக்கொண்ட பகுதிகள் இவைகளே, ஆசாரியனான எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரயேல் வம்சத்தாரின் தலைவர்களும் அந்நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்கள். மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே சொத்துரிமை நிலம் ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சீட்டுப்போட்டு பகிர்ந்துகொடுக்கப்பட்டது. மோசே மற்ற இரண்டரை கோத்திரங்களுக்கும் யோர்தானுக்குக் கிழக்கே நிலத்தைச் சொத்துரிமையாகப் பங்கிட்டுக்கொடுத்திருந்தான். ஆனால் லேவியருக்கோ மற்றவர்களுக்கு மத்தியில் சொத்துரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் யோசேப்பின் மகன்களான மனாசே, எப்பிராயீம் ஆகியோர் இரு கோத்திரங்களாக இருந்தனர். லேவியர்களோ நிலத்தில் பங்கொன்றும் பெறவில்லை. அவர்கள் வசிப்பதற்கு நகரங்களும், அவர்களுடைய மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன. இவ்விதம் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் நிலத்தைப் பங்கிட்டுக்கொண்டார்கள். யூதா மனிதர் கில்காலில் இருக்கும் யோசுவாவிடம் வந்தார்கள். அப்பொழுது கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் யெகோவா என்னையும் உம்மையும் குறித்து இறைவனின் மனிதனாகிய மோசேயிடம் கூறியதை நீர் நன்கு அறிவீர். காதேஸ் பர்னேயாவிலிருந்து யெகோவாவின் அடியானாகிய மோசே, கானான் நாட்டைப் பார்த்துவரும்படி என்னை அனுப்பியபோது, எனக்கு நாற்பது வயதாய் இருந்தது. என் மனதில் சரியெனத் தென்பட்டதின்படி மோசேயிடம் ஒரு அறிக்கை கொண்டுவந்தேன். ஆனால் என்னுடன் வந்த என் சகோதரர்கள் இஸ்ரயேலரின் உள்ளங்களை பயத்தினால் கலங்கப்பண்ணினார்கள். நானோ என் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றினேன். அப்படியே, ‘நீ உன் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றியபடியால், நீ காலடி வைத்த இடம் முழுவதும் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்றுமுள்ள சொத்துரிமை நிலமாக இருக்கும்’ என்று மோசே அந்நாளில் வாக்குறுதி அளித்தான். “யெகோவா இவற்றை மோசேக்கு வாக்களித்ததிலிருந்து இன்றுவரை நாற்பத்தைந்து ஆண்டுகள் என்னை உயிருடன் வைத்திருக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது எனக்கு எண்பத்தைந்து வயது. அன்று மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் நான் பெலனுடையவனாய் இருக்கிறேன். அன்று இருந்ததுபோலவே இன்றும் போருக்குப் போகத்தக்க வல்லமையுடையவனாயும் இருக்கிறேன். எனவே யெகோவா அந்த நாளில் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த அந்த மலைநாட்டை இப்பொழுது எனக்குத் தாரும். ஏனாக்கியர் அங்கே வசிக்கிறார்களென்றும், அவர்களுடைய பட்டணங்கள் பெரிய அரண்களுடைய பட்டணங்களென்றும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். யெகோவா சொன்னபடியே அவருடைய உதவியுடன் நான் அவர்களைத் துரத்திவிடுவேன்” என்றான். எனவே யோசுவா எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, அவனுக்கு எப்ரோன் பிரதேசத்தைச் சொத்துரிமையாகக் கொடுத்தான். கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவை முழுமனதுடன் பின்பற்றியதால், அன்றிலிருந்து இன்றுவரை எப்ரோன் பிரதேசம் அவனுக்குச் சொந்தமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு எப்ரோன் நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. ஏனாக்கியருக்குள்ளே மதிப்புக்குரியவனான அர்பாவின் பெயரால் அந்நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. போர் ஓய்ந்திருந்ததினால் தேசம் அமைதியாய் இருந்தது.

யோசுவா 14:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கானான் தேசத்திலே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களின் தலைவர்களும், யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு, ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சொந்தமாகப் பங்கிட்டார்கள். மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே பங்கு கொடுத்திருந்தான்; லேவியர்களுக்குமட்டும் அவர்கள் நடுவில் பங்கு கொடுக்கவில்லை. மனாசே மற்றும் எப்பிராயீம் என்பவர்கள் யோசேப்பின் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆகவே அவர்கள் லேவியர்களுக்கு தேசத்திலே பங்குகொடுக்காமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களைமட்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள். அப்பொழுது யூதாவின் கோத்திரத்தார்கள் கில்காலிலே யோசுவாவிடம் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னேயாவிலே யெகோவா என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனிதனாகிய மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். தேசத்தை வேவுபார்க்கக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு 40 வயதாக இருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன். ஆனாலும் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களின் இருதயத்தைப் பயத்தினாலே கரையச்செய்தார்கள்; நானோ என் தேவனாகிய யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினேன். அந்த நாளிலே மோசே: நீ என் தேவனாகிய யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் சொந்தமாக இருக்கட்டும் என்று சொல்லி ஆணையிட்டார். இப்போதும், இதோ, யெகோவா சொன்னபடியே என்னை உயிரோடு காத்தார்; இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் நடந்தபோது, யெகோவா அந்த வார்த்தையை மோசேயிடம் சொல்லி இப்பொழுது 45 வருடங்கள் ஆனது; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்தநாள்வரை எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாக இருக்கிறதற்கு அப்பொழுது எனக்கு இருந்த பெலன் இப்பொழுதும் எனக்கு இருக்கிறது. ஆகவே யெகோவா அந்த நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியர்களும், பாதுகாப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்த நாளிலே கேள்விப்பட்டீரே; யெகோவா என்னோடு இருப்பாரானால், யெகோவா சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான். ஆகவே கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், இந்த நாள்வரை இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சொந்தமானது. முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.

யோசுவா 14:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களும் ஜனங்களுக்கு எந்தெந்த தேசத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தனர். ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு விரும்பிய வகையை அவர் முன்னரே மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரவருக்கு எந்தெந்த நிலப்பகுதி வேண்டுமென்பதை ஒன்பதரை கோத்திரத்தாரும் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தனர். இரண்டரை கோத்திரத்தாருக்கு மோசே ஏற்கெனவே யோர்தானுக்குக் கீழக்கேயுள்ள நிலத்தைப் பிரித்துக் கொடுத்திருந்தான். ஆனால் லேவியின் கோத்திரத்தார் எந்த நிலத்தையும் பெறவில்லை. பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் அவர்களுக்குரிய நிலம் கொடுக்கப்பட்டது. யோசேப்பின் ஜனங்கள் மனாசே, எப்பிராயீம் என்று இரண்டு கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு கோத்திரமும் நிலத்தைப் பெற்றனர். லேவி கோத்திரத்துக்கு எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வசிப்பதற்கு சில ஊர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்திரத்தின் நடுவிலும் இந்த ஊர்கள் இருந்தன. அவர்களுடைய மிருகங்களுக்காக வயல்வெளி கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் நிலத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பதென்று கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தார். கர்த்தர் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் நிலத்தைப் பங்கிட்டனர். ஒருநாள் கில்காலில் யோசுவாவிடம் யூதா கோத்திரத்திலிருந்து சிலர் வந்தனர். கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், அவர்களில் ஒருவன். காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் கர்த்தர் அவரது ஊழியனாகிய, மோசேயிடம், உம்மையும் என்னையும் குறித்துச் சொன்னவற்றை நினைவுகூர்ந்து பாரும். நாம் போகப்போகிற தேசத்தைப் பார்த்து வரும்படியாக கர்த்தருடைய ஊழியனாகிய மோசே என்னை அனுப்பினான். எனக்கு அப்போது நாற்பது வயது. அத்தேசத்தைப் பற்றிய எனது எண்ணங்களை நான் திரும்பி வந்தபோது மோசேக்குக் கூறினேன். என்னோடு வந்த மற்றவர்கள் தாம் பார்த்து அஞ்சியவற்றைக் குறித்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அத்தேசத்தைப் பெறுவதற்கு கர்த்தர் நிச்சயம் உதவி செய்வார் என நான் உண்மையாகவே நம்பினேன். எனவே அந்நாளில், ‘நீ செல்லும் தேசம் உனக்குரியதாகும். உனது பிள்ளைகளுக்கு எப்போதும் அத்தேசம் சொந்தமாகும். எனது தேவனாகிய கர்த்தரை, நீ உண்மையாகவே நம்பியதால் உனக்கு அத்தேசத்தைக் கொடுப்பேன்’ என்று மோசே எனக்கு வாக்குறுதி அளித்தான். “கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் எனக்குச் கூறியபடியே இன்றும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார். நாம் பாலைவனங்களில் இதுவரைக்கும் அலைந்தோம். இப்போது எனக்கு, 85 வயது. மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் பெலமுள்ளவனாக இருக்கிறேன். அன்று போலவே இன்றும் என்னால் போரிட முடியும். முன்பு, கர்த்தர் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த மலைப்பிரதேசத்தை இப்போது எனக்குக் கொடும். வலிமை பொருந்திய ஏனாக்கியர் அந்நாளில் அங்கு வாழ்ந்தனர் என்பதையும், அவர்களுடைய நகரங்கள் பெரியதாகவும் பாதுகாப்புடையதாகவும் இருக்கின்றன என்பதையும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். இப்போதும், கர்த்தர் என்னோடிருக்கிறபடியால், அவர்களை வெளியேற்றி விட்டு கர்த்தர் கூறியபடி அந்த நிலப்பகுதியை நான் உரிமையாக்கிக்கொள்வேன்” என்றான். எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை யோசுவா ஆசீர்வதித்தான். அவனுக்குச் சொந்தமாக எபிரோன் நகரை யோசுவா கொடுத்தான். கேனாசியனான, எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குடும்பத்தாருக்கு இன்றும் அந்நகரம் உரியதாக இருக்கிறது. ஏனென்றால் அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம் நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தான். முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.

யோசுவா 14:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு, ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள். மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்கு மாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை. மனாசே எப்பிராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்கு தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள். அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார். இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று, முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.