யோசுவா 13:1-32
யோசுவா 13:1-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோசுவா வயதுசென்று முதிர்வயதானபோது, யெகோவா அவனிடம், “நீ வயதுசென்றவனாயிருக்கிறாய், இன்னும் கைப்பற்றப்படவேண்டிய நிலப்பரப்புகளோ அதிகமாயிருக்கின்றன. “மீதியாயிருக்கின்ற நிலப்பகுதிகளாவன: “பெலிஸ்தியரினதும் கேசூரியரினதும் முழுபகுதிகளும், எகிப்தின் கிழக்கே உள்ள சீகோர் ஆற்றிலிருந்து வடக்கே எக்ரோன் பிரதேசம் வரையுள்ளவையாகும். இவை முழுவதும் கானானியருடையதாகக் கருதப்பட்டன. இப்பகுதியிலிருந்த நகரங்களான காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகியவற்றில் ஐந்து பெலிஸ்திய சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்தார்கள். அதற்குத் தெற்கில் ஆவியர் வாழ்ந்தார்கள். மிகுதியாயிருந்த கானானியரின் தேசம்முழுவதும் சீதோனியருக்குச் சொந்தமான ஆரா பிரதேசத்திலிருந்து ஆப்பெக் வரையும் இருந்தது. அதற்குள் எமோரியரின் பிரதேசமும் அடங்கும். அத்துடன் கிபலியரின் பகுதியும், கிழக்கேயிருந்த லெபனோனின் பகுதி அனைத்தும் உள்ளடங்கியிருந்தது. இப்பகுதி எர்மோன் மலைக்குக் கீழேயுள்ள பாகால்காத்திலிருந்து ஆமாத்துக்குப் போகும் இடம்வரையிலும் உள்ளது. “லெபனோனில் இருந்து மிஸ்ரபோத்மாயீம் வரையிலுள்ள மலைப் பிரதேசங்களில் வசிக்கும் சீதோனியர் அனைவரையும், நான், நானே இஸ்ரயேலுக்கு முன்பாகத் துரத்துவேன். நான் உனக்கு அறிவுறுத்தியபடி அதை இஸ்ரயேலுக்குச் சொத்துரிமை நிலமாகப் பங்கிடத்தவறாதே. அப்பகுதியை மற்ற ஒன்பது கோத்திரத்திற்கும் மனாசேயின் அரைக்கோத்திரத்திற்கும் உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொடு.” மனாசே கோத்திரத்தின் மற்ற அரைப்பகுதியினரும், ரூபன், காத் கோத்திரத்தாரும் யோர்தானுக்குக் கிழக்கே தங்கள் சொத்துரிமையைப் பெற்றார்கள். இதை நியமித்த யெகோவாவின் அடியவனாகிய மோசே பிரித்துக்கொடுத்த விதமாகவே அவற்றைப் பெற்றிருந்தார்கள். அது அர்னோன் ஆற்றங்கரையின் ஓரத்திலுள்ள அரோயேரிலிருந்தும், நதியின் நடுவிலுள்ள பட்டணத்திலிருந்தும் தீபோன் வரையுள்ள மேதேபாவின் சமபூமி முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அத்துடன் எஸ்போன் சீகோன் என்னும் எமோரிய அரசனின் ஆட்சிக்குக்கீழ் இருந்த பட்டணங்கள் எல்லாம், அம்மோனியரின் எல்லைவரை பரந்திருந்தன. இது கீலேயாத்தையும், கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதும், சல்கா வரையுள்ள பாசான் முழுவதையும் உட்பட்டிருந்தது. ஆகவே ரெப்பாயீமியரில் கடைசியாகத் தப்பித்துக்கொண்ட ஒருவனும் அஸ்தரோத், எத்ரே பட்டணங்களில் அரசாண்டவனுமான ஓகுவின் அரசு பாசானில் இப்பகுதியை உள்ளடக்கியிருந்தது. மோசே இந்த இரு அரசர்களான சீகோனையும் ஓகுவையும் தோற்கடித்து, அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருந்தான். ஆயினும் இஸ்ரயேலர் கேசூரியரையும், மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை. அவர்கள் இந்நாள்வரை இஸ்ரயேலர் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மோசே லேவி கோத்திரத்திற்கு சொத்துரிமை கொடுக்கவில்லை. இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா அவர்களுக்கு வாக்குப்பண்ணியபடி, யெகோவாவுக்கு தகனபலியாக கொடுக்கப்பட்டவையே அவர்களின் சொத்துரிமையாயிருந்தது. ரூபன் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக மோசே கொடுத்திருந்தவை இவையே: அர்னோன் கணவாயின் ஓரத்திலுள்ள அரோயேர் பட்டணத்திலிருந்து, அக்கணவாயின் நடுவிலுள்ள பட்டணத்தை உள்ளடக்கி மேதேபாவுக்கு அப்பாலுள்ள மேட்டுநிலச் சமதரை முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போனையும் அதன் பட்டணங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தன. அந்தப் பட்டணங்கள் தீபோன், பாமோத் பாகால், பெத்பாகால் மெயோன், யாகாசா, கெதெமோத், மேபாகாத், கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கில் உள்ள உயர்ந்த குன்றிலிருந்து செரேத்சகார், அத்துடன் பெத்பெயோர், பிஸ்கா மலைச்சரிவுகள், பெத்யெசிமோத், சமபூமியிருந்த எல்லா நகரங்களையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போனில் முன்பு ஆட்சி செய்த எமோரியரின் அரசனான சீகோனின் ஆட்சியிலிருந்த பிரதேசங்கள் அனைத்தையும், அப்பிரதேசம் உள்ளடக்கியிருந்தது. அந்நாட்டில் வாழ்ந்த சீகோனையும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருந்த மீதியானின் தலைவர்களான ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் மோசே தோற்கடித்திருந்தான். இவர்கள் அங்கு வாழ்ந்த சீகோன் அரசனுடன் கூட்டுச்சேர்ந்திருந்தார்கள். போரில் கொலையுண்டவர்களுடன் பேயோரின் மகன் குறிசொல்லும் வழக்கமுடைய பிலேயாமையும் இஸ்ரயேலர் வாளுக்கு இரையாக்கினார்கள். ரூபனியரின் மேற்கு எல்லையாக யோர்தான் நதிக்கரை அமைந்திருந்தது. மேற்குறிப்பிட்ட இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ரூபனியருக்கு வம்சம் வம்சமாகச் சொத்துரிமையான நிலமாகக் கொடுக்கப்பட்டிருந்தன. காத் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக மோசே பங்கிட்டுக்கொடுத்த பிரதேசங்களாவன: யாசேரின் பிரதேசம், கீலேயாத்தின் நகரங்கள் அனைத்தும், ரப்பாவுக்கு அருகே அரோயேர் வரையிலுள்ள அம்மோனியரின் பிரதேசத்தில் பாதி. அத்துடன் எஸ்போனிலிருந்து ராமாத் மிஸ்பாவும், பெத்தோனீம் வரையுள்ள பகுதியும், மகனாயீம் தொடங்கி தெபீரின் சுற்றுப்பிரதேசம் வரையுள்ள பகுதியும் அடங்கியிருந்தன. பள்ளத்தாக்கிலிருந்த பெத் ஆராம், பெத் நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகிய நகரங்கள் எஸ்போனின் அரசனாயிருந்த சீகோனின் பிரதேசத்தின் மிகுதியான பகுதிகள். இது யோர்தான் நதியின் கிழக்குக் கரைப்பகுதியில் வடக்கே, கலிலேயாக் கடலின் முடிவுவரையிருந்த பிரதேசம். மேற்கூறிய நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே காத்தியருக்கு வம்சம் வம்சமாக சொத்துரிமையான நிலமாக இருந்தன. மனாசே கோத்திரத்தின் அரைப் பகுதியினருக்கு, அதாவது மனாசேயின் வழித்தோன்றலின் பாதிக் குடும்பத்தினருக்கு வம்சம் வம்சமாக மோசே பங்கிட்டுக்கொடுத்திருந்த சொத்துரிமை நிலமாவது: மகனாயீம் நகர் தொடங்கி பாசான் நாடு உட்பட பாசானின் அரசனாகிய ஓகின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரதேசம் முழுவதும், அதாவது பாசான் பிரதேசத்தில் யாவீரின் குடியிருப்புகளெல்லாம், அறுபது பட்டணங்கள், மற்றும் கீலேயாத் பிரதேசத்தின் பாதி, அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் இதில் அடங்கின. இவ்விரு நகரங்களும் பாசானின் அரசன் ஓகின் பட்டணங்கள். இப்பிரதேசம் மனாசேயின் மகனாகிய மாகீர் என்பவனது சந்ததியினருக்கு கொடுக்கப்பட்டது. அதாவது மாகீரின் மகன்களின் அரைவாசியினருக்கு அவை வம்சம் வம்சமாகப் பிரித்துக்கொடுக்கப்பட்டன. எரிகோ நகருக்குக் கிழக்கேயுள்ள யோர்தான் நதிக்கு அப்பால் மோவாப்பின் சமவெளியில் இருக்கும்போது மோசே கொடுத்த சொத்துரிமை நிலம் இவையே.
யோசுவா 13:1-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யோசுவா வயதுமுதிர்ந்தவனானபோது, யெகோவா அவனை நோக்கி: நீ வயதுமுதிர்ந்தவனானாய்; கைப்பற்றிக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விசாலமாக இருக்கிறது. மீதியாக இருக்கிற தேசம் எவைகளென்றால், எகிப்திற்கு எதிரான சீகோர் ஆறு துவங்கிக் கானானியர்களைச் சேர்ந்ததாக என்னப்படும் வடக்கே இருக்கிற எக்ரோனின் எல்லைவரையுள்ள பெலிஸ்தர்களின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும், காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியர்களின் நாடும், தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும், கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகிற திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும், லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும். ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகும்படிப் பங்கிடு என்றார். மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான். அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும், எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத்தையும், கெசூரியர்கள் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும், அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான். இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள். லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு. மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான். அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி மெதெபாவரையுள்ள சமபூமி முழுவதும், சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன், யாகசா, கெதெமோத், மெபாகாத், கீரியாத்தாயீம், சீப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார், பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான். இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பிலேயாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள். அப்படியே யோர்தானும் அதற்கடுத்த பகுதியும் ரூபன் கோத்திரத்தின் எல்லையானது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் கோத்திரத்தார்களுக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த பங்கு. காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்: யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரப்பாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும், எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது. இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த பங்கு. மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான். மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது. பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான். மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற மோவாபின் சமவெளிகளில் பங்குகளாகக் கொடுத்தவைகள் இவைகளே.
யோசுவா 13:1-32 பரிசுத்த பைபிள் (TAERV)
யோசுவா வயது முதிர்ந்தவனாக இருக்கும்போது, கர்த்தர் அவனை நோக்கி, “யோசுவா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது, ஆனால் நீ கைப்பற்றவேண்டிய நாடுகள் இன்னும் பல உள்ளன. கெசூரிம் தேசத்தையோ, பெலிஸ்தியரின் தேசத்தையோ நீ இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை. எகிப்திலுள்ள சீகேபர் நதியின் தேசங்களையும், வடக்கில் எக்ரோனின் கரையிலுள்ள நாடுகளையும் நீ கைப்பற்றவில்லை. அது இன்னமும் கானானியருக்குரியதாக உள்ளது. காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய இடங்களின் ஐந்து பெலிஸ்திய தலைவர்களையும் நீ தோற்கடிக்க வேண்டியுள்ளது. கானானியரின் நாட்டிற்குக் கிழக்கேயுள்ள ஏவியரையும் நீ வெல்லவேண்டும். கிப்லியரின் தேசத்தையும் நீ இன்னும் வெற்றி கொள்ளவில்லை. எர்மோன் மலையின் கீழேயுள்ள பாகால்காத்திற்குக் கிழக்கில் லீபனோனின் பகுதியிலிருந்து லெபோ ஆமாத் வரைக்கும் நீ கைப்பற்ற வேண்டும். “சீதோனின் ஜனங்கள் லீபனோனிலிருந்து மிஸ்ரெபோத்மாயீம் வரையுள்ள மலைநாட்டில் வசித்து வருகின்றனர். இஸ்ரவேலருக்காக இவர்கள் அனைவரையும் நான் துரத்துவேன். இஸ்ரவேலின் ஜனங்களுக்காக தேசத்தைப் பிரிக்கும்போது இத்தேசத்தையும் ஞாபகப்படுத்திக்கொள். நான் உனக்குச் சொன்னபடியே இதைச் செய். இப்போது, தேசத்தை ஒன்பது கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் சரிபாதியினருக்கும் பிரித்துக்கொடு” என்றார். ரூபன், காத், ஆகிய கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் பாதிப் பகுதியினரும் அவர்களுக்குரிய தேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்தார்கள். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தான். ஆரோவேர் நதிக்கருகிலுள்ள அர்னோன் நதியில் அத்தேசம் ஆரம்பித்து நதியின் நடுப்பகுதியிலுள்ள ஊர்வரைக்கும் அவர்களது தேசம் இருந்தது. அது மெதபாவிலிருந்து தீபோன்வரைக்குமுள்ள சமவெளியையும் கொண்டிருந்தது. அத்தேசத்தில் எமோரியரின் ராஜாவாகிய சீகோன் ஆண்டிருந்த எல்லா ஊர்களும் அடங்கியிருந்தன. அந்த ராஜா எஸ்போன் நகரில் ஆண்டு வந்தான். எமோரியர் வாழ்ந்த பகுதி வரைக்கும் அத்தேசம் தொடர்ந்தது. கீலேயாத் என்னும் ஊரும் அத்தேசத்தில் இருந்தது. கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்கள் வாழ்ந்த பகுதியும் அத்தேசத்தில் இருந்தது. எர்மோன் மலைப்பகுதி முழுவதும் சலேகாவரைக்குமான பாசானின் பகுதியும் அந்த நிலப் பகுதியில் அடங்கி இருந்தன. ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற ராஜா ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான். கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் துரத்தவில்லை, இன்றும் இஸ்ரவேல் ஜனங்களோடுகூட அவர்களும் வாழ்கின்றனர். லேவி கோத்திரத்திற்கு எந்த நிலப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, தகன பலியாகக் கொடுக்கப்பட்ட மிருகங்கள் அனைத்தும் லேவி கோத்திரத்தினரைச் சார்ந்தவர்களுக்கு உரியனவாயின. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தது அதுவே. ரூபனின் கோத்திரத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மோசே வழங்கியிருந்த சிறிய நிலப்பகுதியை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர்: அது அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேரிலிருந்து மெதெபா என்ற ஊர் வரைக்கும் உள்ள பகுதியாகும். அந்நதியின் மத்தியிலுள்ள ஊரையும், சமவெளிப் பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் வரைக்கும் அத்தேசம் இருந்தது. சமவெளியின் எல்லா ஊர்களையும் அது கொண்டிருந்தது. தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால், மெயோன் ஆகியப் பகுதிகளும், யாகாசா, கொதெமோத், மேபாகாத், கீரியாத்தாயீம், சிப்மா, ஆகியவையும், பள்ளத்தாக்கைச் சார்ந்த மலைப் பகுதிகளில் உள்ள செரேத்சகார், பெத்பேயோர், பிஸ்காவின் மலைகள், பெத்யெசிமோத் ஆகிய பகுதிகளும் அந்த ஊர்களில் அடங்கியிருந்தன. அத்தேசம் சமவெளியிலுள்ள எல்லா ஊர்களையும், எமோரியரின் ராஜாவாகிய சீகோன் அரசாண்ட எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் என்னும் ஊரில் அந்த ராஜா அரசாட்சி செய்தான். ஆனால் மோசே அவனையும், மீதியானியரின் தலைவர்களையும் தோற்கடித்தான். ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா ஆகியோர் அத்தலைவர்கள் ஆவார்கள். (இத்தலைவர்கள் எல்லோரும் சீகோனுடன் ஒன்றுசேர்ந்து மோசேயை எதிர்த்துப் போரிட்டனர்.) இத்தலைவர்கள் எல்லோரும் அந்நாட்டில் வசித்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் பேயோரின் குமாரனாகிய பாலாமைத் தோற்கடித்தனர். (எதிர்காலம் பற்றி தனது மந்திர சக்தியால் சொல்வதற்குப் பாலாம் முயன்று கொண்டிருந்தான்.) போரின்போது இஸ்ரவேல் ஜனங்கள் பலரைக் கொன்றனர். யோர்தான் நதிக்கரை ரூபனுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லையாக அமைந்தது. மேலே கூறப்பட்ட ஊர்களும் அவற்றின் வயல்களும் ரூபனுக்குச் சொந்தமான தேசத்தில் இருந்தன, காத்தின் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி மோசே இத்தேசத்தைக் கொடுத்திருந்தான்: யாசேரின் தேசமும் கீலேயாத்தின் எல்லா ஊர்களும், ராபாவின் அருகேயுள்ள ஆரோவேர் வரைக்குமான அம்மோனியரின் தேசத்தில் பாதியையும் கொடுத்தான். அத்தேசம் எஸ்போனிலிருந்து ராமாத் மிஸ்பா பெத்தோனீம் வரைக்கும் உள்ள பகுதியைக் கொண்டிருந்தது. அத்தேசம் மக்னாயீமிலிருந்து தெபீர் வரைக்குமுள்ள இடத்தைக் கொண்டது. பெத்ஹராம் பள்ளத்தாக்கு, பெத்நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகியவையும் அத்தேசத்தில் இருந்தன. எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் ஆண்ட மீதி நாடும் இந்த நிலத்தில் அடங்கியிருந்தது. யோர்தான் நதியானது அந்த நிலத்தில் கிழக்குப் பகுதியாக அமைந்தது. அந்த நிலம் கலிலேயா ஏரியின் கடைசி வரைக்கும் தொடர்ந்தது. மோசே காத் கோத்திரத்தாருக்குக் கொடுத்த தேசத்தில் இவையெல்லாம் இருந்தன. மேலே தரப்பட்ட எல்லா ஊர்களும் அத்தேசத்தைச் சார்ந்தன. இவற்றை காத் கோத்திரத்தின் வம்சத்தினருக்கு மோசே பிரித்துக் கொடுத்தான். மனாசேயின் கோத்திரத்துக்கு மோசே கொடுத்த நிலம் பின்வருவதாகும்: மனாசே கோத்திரத்தின் பாதிப் பகுதியினர் இதனைப் பெற்றனர். மக்னாயீமில் தேசம் ஆரம்பித்தது. பாசான் முழுவதும் பாசானின் ராஜாவாகிய ஓகினால் ஆளப்பட்ட நாடும், பாசானில் யாவீரின் எல்லா ஊர்களும் அத்தேசத்தில் இருந்தன. (மொத்தம் 60 நகரங்கள் இருந்தன.) கீலேயாத்தின் பாதிபாகம், அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் அத்தேசத்தில் இருந்தன. (ஓக் ராஜா வசித்த நகரங்கள் கீலேயாத், அஸ்தரோத், எத்ரேயி ஆகியவை.) மனாசேயின் குமாரனாகிய மாகீரின் குடும்பத்திற்கு இத்தேசங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன. மனாசேயின் குமாரர்களில் பாதிக்குடும்பத்தினர் அவற்றைப் பெற்றனர். மோசே இத்தேசத்தை இந்தக் கோத்திரத்தினருக்கு கொடுத்தான். மோவாப் சம வெளியில் ஜனங்கள் பாளையமிட்டிருந்தபோது மோசே இதைச் செய்தான். எரிகோவிற்குக் கிழக்கில் யோர்தான் நதிக்குக் குறுக்காக இது இருந்தது.
யோசுவா 13:1-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது. மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறுதுவக்கிக் கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும், காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும், தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும், கிப்லியரின் நாடும், சூரியோதயப்புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும், லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும். ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார். மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான். அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதெபாவின் சமனான பூமி யாவையும், எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும், கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும், அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான். இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள். லேவியரின் கோத்திரத்துக்கு மாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம். மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான். அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும், சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன், யாகசா, கெதெமோத், மேபாகாத், கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார், பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான். இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள். அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம். காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்: யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர் மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும், எஸ்போன் துவக்கி ராமாத்மிஸ்பே மட்டும் பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்ற பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான் மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம். மனாசே புத்திரரின் பாதிக் கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத்தக்கதாகக் கொடுத்தான். மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான். மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.