யோசுவா 11:1-15
யோசுவா 11:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆத்சோர் அரசன் யாபீன் இந்த வெற்றிகளைப்பற்றிக் கேள்விப்பட்டதும், அருகிலுள்ள பட்டணங்களின் அரசர்களுக்கு ஒரு அவசரசெய்தி அனுப்பினான். அவர்கள்: மாதோனின் அரசன் யோபாப், சிம்ரோனின் அரசன், அக்சாபின் அரசன், மலைகளிலும், கின்னரோத்திற்குத் தெற்கேயுள்ள அரபாவிலும், மேற்கே மலையடிவாரங்களிலும், மேற்கேயுள்ள நாபோத் தோரிலும் ஆட்சி செய்த வடதிசை அரசர்கள் ஆகியோரே; அத்துடன் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், மலைநாட்டிலுள்ள எபூசியர், மிஸ்பா என்னும் பகுதியில் எர்மோன் மலையடிவாரத்தில் வாழ்ந்த ஏவியர் ஆகியோரிடத்திற்கும் செய்தி அனுப்பினான். அவர்கள் தங்கள் எல்லாப் படைகளோடும், குதிரைகளோடும், இரதங்களோடும் புறப்பட்டுவந்து ஒன்றுகூடினர். இந்த பெரும்படை கடற்கரை மணலைப்போல எண்ணிக்கையில் அதிகமாயிருந்தது. இந்த அரசர்களெல்லோரும் இஸ்ரயேலருக்கு எதிராகப் போர் செய்ய ஒன்றுகூடி, மேரோம் என்னும் நீரூற்றருகே முகாமிட்டார்கள். அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நாளை இந்நேரத்தில் நான் அவர்கள் அனைவரையும் கொல்லப்பட்டவர்களாக இஸ்ரயேலரிடம் ஒப்படைப்பேன். நீ அவர்களுடைய குதிரைகளின் பின்கால் நரம்புகளை வெட்டி, அவர்களுடைய இரதங்களையும் எரித்துவிடவேண்டும்” என்றார். யோசுவாவும் அவனுடைய படையினர் அனைவரும், மேரோம் நீரூற்றருகே எதிரிகளை திடீரெனத் தாக்கினார்கள். யெகோவா எதிரிகளை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்தார். இஸ்ரயேலர் அவர்களை முறியடித்து பெரிய சீதோன், மிஸ்ரபோத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பே பள்ளத்தாக்கு ஆகிய இடங்கள்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்கள். அவர்களில் ஒருவரையும் தப்பவிடவில்லை. யெகோவா கட்டளையிட்டபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தான்: அவன் குதிரைகளின் பின்கால் தசை நரம்புகளை வெட்டி அவற்றை முடமாக்கி இரதங்களையும் எரித்தான். அவ்வேளை யோசுவா திரும்பிவந்து, ஆத்சோர் நாட்டைக் கைப்பற்றி அதன் அரசனை வாளுக்கு இரையாக்கினான். ஆத்சோர் இந்த அரசுகளுக்கெல்லாம் தலைமைப் பட்டணமாய் இருந்தது. அங்குள்ள ஒவ்வொருவரும் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள். இஸ்ரயேலர் சுவாசமுள்ள ஒன்றையும் தப்பவிடாமல், அவர்கள் எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள். யோசுவா முழு ஆத்சோரையுமே எரித்துப்போட்டான். யோசுவா அந்த அரசர்கள் வாழும் எல்லாப் பட்டணங்களையும் கைப்பற்றி, அவற்றின் அரசர்களை வாளுக்கு இரையாக்கினான். யெகோவாவின் அடியானாகிய மோசே கட்டளையிட்டபடி அவற்றையெல்லாம் யோசுவா முழுவதும் அழித்தான். ஆனாலும் இஸ்ரயேலர் யோசுவா எரித்துப்போட்ட ஆத்சோர் பட்டணத்தைத்தவிர, மேடுகளின்மேல் கட்டப்பட்ட எந்தப்பட்டணத்தையும் எரிக்கவில்லை. இந்த நகரங்களிலிருந்து கொள்ளைப்பொருட்களையும் மிருகங்களையும் இஸ்ரயேலர் தங்களுக்கெனக் கொண்டுசென்றார்கள். ஆனால் சுவாசமுள்ள ஒருவரையும் தப்பவிடாமல் அம்மக்கள் எல்லோரும் முற்றுமாக அழியும்வரை, அவர்களைத் தங்கள் வாள்களுக்கு இரையாக்கினார்கள். யெகோவா தமது அடியவனாகிய மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான். யோசுவாவும் அதைச் செய்தான்.
யோசுவா 11:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும், வடக்கே இருக்கிற மலைகளிலும் கின்னரேத்திற்குத் தெற்கே இருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடமும், கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான். அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள். இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள். அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார். யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள். யெகோவா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்து, பெரிய சீதோன்வரைக்கும் மிஸ்ரபோத்மாயீம்வரைக்கும், கிழக்கே இருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குவரைக்கும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியில்லாதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள். யோசுவா யெகோவா தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான். அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது. அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான். அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயத்தினால் வெட்டி, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டான். ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான். அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துப்போடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை. யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.
யோசுவா 11:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன், நடந்த எல்லா காரியங்களையும் குறித்துக் கேள்விப்பட்டான். எனவே பல ராஜாக்களின் சேனைகளையும் திரட்ட முடிவு செய்தான். மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபாவின் ராஜாவிடத்திற்கும், வடக்கிலும், மலைநாடுகளிலும், பாலைவனங்களிலும் உள்ள மற்ற ராஜாக்களுக்கும் செய்தியனுப்பினான். கின்னரோத், நெகேவ், மேற்கிலுள்ள மலையடிவாரங்களிலுள்ள ராஜாக்களுக்கும் யாபீன் செய்தியனுப்பினான். மேற்கிலுள்ள நாபோத், தோரின் ராஜாவுக்கும் யாபீன் செய்தி அனுப்பினான். கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கானானியரின் ராஜாக்களுக்கும் யாபீன் செய்தியைத் தெரிவித்தான். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், எர்மோன் மலைக்குக் கீழே மிஸ்பாவிற்கு அருகிலுள்ள ஏவியர் ஆகியோருக்கும் செய்தி கூறினான். எனவே இந்த ராஜாக்களின் படைகள் அனைத்தும் ஒன்று கூடி போர் வீரர்களும், குதிரைகளும், இரதங்களும் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தபடியால், அது மிகவும் பெரிய படையாக இருந்தது. கடற்கரையின் மணலைப் போன்று ஆட்கள் ஏராளமாக இருந்தனர். மோரோம் என்கிற சிறு நதிக்கருகே எல்லா ராஜாக்களும் சந்தித்தனர். அவர்கள் தங்கள் படைகளை எல்லாம் ஒன்றிணைத்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போர் செய்யத் திட்டமிட்டனர். அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அப்படையைக் கண்டு அஞ்சாதே. நீ அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். நாளை இதே வேளையில், நீ அவர்களையெல்லாம் கொன்றிருப்பாய். நீங்கள் குதிரையின் கால்களை வெட்டி, அவர்களின் இரதங்களை எரித்துப் போடுவீர்கள்” என்று சொன்னார். யோசுவாவும் அவனது படையினரும் பகைவரை வியப்படையச் செய்தனர். மேரோம் நதிக்கரையில் அவர்கள் பகைவர்களைத் தாக்கினார்கள். பிறகு இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். இஸ்ரவேல் படையினர் அவர்களைத் தோற்கடித்து பெரிய சீதோன், மிஸ்ர போத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பா பள்ளத்தாக்கு வரைக்கும் துரத்தினார்கள். பகைவரில் ஒருவரும் உயிரோடிராதபடிக்கு இஸ்ரவேல் படையினர் போர் செய்தார்கள். கர்த்தர் செய்யும்படியாகக் கூறியவற்றையெல்லாம் அவன் செய்தான். யோசுவா அவர்களது குதிரைகளின் கால்களை வெட்டி, அவர்களது தேர்களை எரித்தான். பின் யோசுவா திரும்பிச் சென்று ஆத்சோரைக் கைப்பற்றினான். ஆத்சோரின் ராஜாவைக் கொன்றான். (இஸ்ரேவலுக்கு எதிராகப் போர் செய்த எல்லா அரசுகளுக்கும் ஆத்சோர் தலைமை தாங்கி இருந்தான்.) இஸ்ரவேல் படை நகரிலிருந்த ஒவ்வொருவரையும் கொன்றழித்தது. எல்லா ஜனங்களையும் அவர்கள் அழித்துப்போட்டனர். எதுவும் உயிரோடு விடப்பட்டிருக்கவில்லை. பிறகு அவர்கள் அந்த நகரை எரித்தனர். யோசுவா எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். அவற்றின் ராஜாக்களையும், நகரங்களில் இருந்த எல்லாவற்றையும் அழித்தான். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, கட்டளையிட்டபடியே யோசுவா செய்தான். ஆனால் இஸ்ரவேல் படை மலைகளின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களை எரிக்கவில்லை. மலையின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களில் அவர்கள் எரித்தழித்த ஒரே நகரம் ஆத்சோர் ஆகும். யோசுவா இந்நகரத்தை எரித்தான். நகரங்களில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்காக வைத்துக்கொண்டனர். நகரத்திலிருந்த மிருகங்களையும் அவர்களுக்காக எடுத்துக்கொண்டனர். ஆனால் மனிதர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டனர். அவர்கள் ஒருவரையும் உயிரோடிருக்க அனுமதிக்கவில்லை. வெகு நாட்களுக்கு முன்னரே கர்த்தர் அவரது ஊழியனாகிய மோசேக்கு இவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டார். பின் மோசே யோசுவாவிற்கு இவ்வாறு செய்யக் கட்டளை தந்தான். ஆகையால் யோசுவா தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டவற்றையெல்லாம் யோசுவா செய்தான்.
யோசுவா 11:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும், வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரோத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும், கிழக்கேயும், மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான். அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடுங்கூடப் புறப்பட்டார்கள். இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலோடே யுத்தம்பண்ண வந்து, மேரோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள். அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார். யோசுவாவும், அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள். கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீம்மட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள். யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான். அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது. அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான். அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான். ஆனாலும் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான். அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்ற கொள்ளைப்பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை. கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.